Monday 23 January 2012

கர்மவீரர் காமராஜர்


பச்சைத் தமிழன் காமராஜர்
கர்மவீரர் காமராஜர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை.
சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார்.
முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது.
டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செலுத்தவும், மீதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கணக்கில் செலுத்த வேண்டும் என்பது காமராசரின் உத்தரவு.
முதல்-அமைச்சராக இருந்த போது கட்சி நிகழ்ச்சிகளுக்காக செல்ல நேர்ந்தால் அரசுக்கு சொந்தமான காரில் போவதில்லை.முதல்-அமைச்சருக்கான சம்பளத்தை அரசு காசோலையாக (பேங்க் செக்) வழங்கும். அதைப் பணமாக மாற்றுவதற் காகவே காமராசரின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது.
முதல்-அமைச்சருக்கான சம்பளம் முழுவதையும் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் கொடுத்து விடுவார். அவரது அம்மாவுக்கு ரூ. 150ஐ காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைக்கும் கட்சிக்காக டில்லிக்கு விமான பயணம் செய்தால் விமான டிக்கெட்டு களை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வாங்கும்.
பழைய தியாகிகள் யாராவது பண உதவி கேட்டு வந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் கொடுப்பார். அங்கு பணம் கொடுத்து விடுவார்கள்.
மாதத்தில் பாதி நாட்கள்தான் சென்னையில் இருப்பார். மீதி நாட்களில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பார்.
அதற்கான பயணப்படி உண்டு. ஆனால் பெருந்தலைவர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பயணப்படி கோரியதும் இல்லை, பெற்றதும் இல்லை.வெளியூர்களில் பயணம் செய்யும் போது பயணிகள் விடுதியில் (டிராவலர்ஸ் பங்களா) தான் பெரும்பாலும் தங்குவார். அந்தந்த ஊர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பயணிகள் விடுதிக்கான வாடகையைக் கொடுக்க வேண்டும்.
காமராசரின் சட்டையில் ஒரு பெரிய பை இருக்கும். ஆனால் அதில் பணமே இராது. சில சமயங்களில் சில்லறை நாணயங்களை வேஷ்டி மடியில் வைத்திருப்பார். யாராவது யாசகம் கேட்டால் போடுவதற்காக அந்த காசுகள் உபயோகப்படும்.
காமராசரின் சொந்த காருக்கு டிரைவராக ஒரு போலீஸ்காரர் தான் இருந்தார். அந்த டிரைவருக்கான சம்பளத்தையும் காமராசரே கொடுத்து வந்தார். (எனக்குதான் டிரைவர் அலவன்ஸ்'’ என்று சம்பளத்தோடு கொடுக்கிறாங்களே, அந்த பணத்தையும், என் பணம் கொஞ்சத்தையும் டிரைவருக்கு கொடுக்கிறேன் என்றார், பெருந்தலைவர்)
காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. (இது அப் போதைய அமைச்சர் ராசாராம் சொன்ன தகவல் என்று `சாவி’ எழுதியுள்ளார்) காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.
ராம் மனோகர் லோகியா என்று வட இந்தியாவில் ஒரு தலைவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகப் போற்றப்பட்டவர். வெளி நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் வெளிநாட்டு இலாக்கா என்று ஒரு பிரிவு இருந்தது. அந்த வெளிநாட்டு இலாக்காவுக்கு லோகியாதான் தலைவ ராக இருந்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதையத்தலைவராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தே வெளியேறிய லோகியா சோஷலிஸ்ட் கட்சியைத் துவக்கினார்.
லோகியாவுக்குக் காங்கிரஸ் கட்சியே பிடிக்கவில்லை. நேரு என்றாலே வெறுப்பு. நேருவை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவதும் உண்டு. நேருவின் கொள்கைகளை மிகவும் கடுமையாகச் சாடுவது லோகியாவின் வாடிக்கையாகி விட்டது.
நேரு பிரதமராக இருந்தபோது லோகியா எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே நேருவுக்குப் பின் யார் என்று ஒரு பிரபலமான கேள்வி அடிக்கடி எழுவது உண்டு.
ஒரு முறை ஒரு பத்திரிகை நிருபர் “நேருவுக்குப் பின் யார் _ உங்கள் கருத்து என்ன?” என்று லோகியாவைச் சீண்டினார். காமராஜ் இருக்கும் போது என்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று லோகியா சொன்னார்.
நேரு இறப்பதற்குப் பல ஆண்டு களுக்கு முன்பே லோகியா இவ்வாறு சொன்னார். அகில இந்திய காங்கிரசில் லோகியா இருந்த போதே தமிழ்நாட்டு காமராசரை லோகியா உன்னிப் பாகக் கவனித்து வந்துள்ளார். நேருவுக்குப் பின் காமராசர் தான் வருவார் என்பதை அப்போதே கணித்து வைத்து விட்டார்.
நேருவுக்குப் பின் காமராசர் டில்லி அரசியலில் கிங் மேக்கர் ஆனார். ஆனால் அதைக் காண்பதற்கு லோகியா உயிருடன் இல்லை.
நேருவுக்குப் பின் யார்? சுயநலமின்றி, நேர்மையுடன் நெறி தவறாமல் நாட்டுக்காக பணியாற்றிய தலைவர்கள் மறைந்து விட்டாலும், ஈடு இணையற்ற தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களில் “பெருந்தலைவர்'’ என்று மக்கள் தங்கள் இதயங்களில் வைத்து துதிக்கும் தலைவர்தான் காமராஜர்.
ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் தூய்மையான தொண்டால் உயர முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர். “நாட்டு நலனே எனது நலன்'’ என்று கருதி காந்திய வழியில் நின்று அரும்பாடுபட்ட காமராஜர் தான் கொண்ட கொள்கைகளை பதவி சுகத்துக்கு பறிகொடுக்காத உத்தமர்
1
காமராஜர் ஆட்சியும் வளமிக்க தமிழகமும்
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கே முன்னுரிமையளித்தார்.
அவரது ஆட்சி காலத்தில் தமிழகம் வளமிக்க மாநிலமாக பொற்கால ஆட்சி நடந்ததற்கு சில நற்சான்றுகளாய் விளங்கும் சாதனைகள் வருமாறு:_
காமராஜரின் ஆட்சி காலத்தில்தான்…
கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 பெரும் நீர் பாசன அணைத் திட்டங்கள்
அகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.
காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.
தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம்
கோவையில் பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டம்.
தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்.
உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.
கிண்டியில் உள்ள அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.
பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை.
பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ்
சிமெண்ட் தொழிற்சாலைகள்.
மேட்டூர் காகித தொழிற்சாலை.
கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை
சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.
சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.
மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.
அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.
தென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர், செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.
15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.
18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.
471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.
தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.
6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.
தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள்
இவை போக ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன. பெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில்தான் இருந்தது
2
காமராஜர் காலைமுதல் மாலை வரை…
சின்னஞ்சிறு வயதில் பெருந்தலைவருடன் வாழ்ந்த அந்த நினைவுகளுடன் ஜவகர், மோகன் ஆகியோர் கூறியதாவது:_
காலையில் தன்னை எத்தனை மணிக்கு எழுப்ப வேண்டும் என்று உதவியாளரிடம் சொல்லி விட்டுதான் காமராஜர் படுக்கைக்குச் செல்வார். படுக்கை அறையை உட்புறமாகப் பூட்டிக் கொள்வதில்லை. அவரது உதவியாளர் அந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டி விட்டுச் சென்று விடுவார்.
படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு மிகவும் விருப்பம். இரவு 12 மணிக்கும் படுக்கச் சென்றாலும் புத்தகம் படித்து விட்டுத் தான் தூங்குவது அவர் வழக்கம். (ரயில் பிரயாணத்தின் போதும் இரவு நெடு நேரம் படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவர் வழக்க மாம்.)
தூங்கும் போது குறட்டைச் சத்தம் பலமாக இருக்குமாம்.
காமராஜர் எழுப்பச் சொன்ன நேர த்தில் உதவியாளர் தாழ்ப் பாளைத் திறந்து கொண்டு அவர் அருகே சென்று அவரைத் தொட்டுத்தான் எழுப்ப வேண்டும்.
உடனே எழுந்து படுக்கையில் சம்மனமிட்டு அமர்ந்து கொள்வார். உதவியாளர் கொண்டு வரும் பில்டர் காபியைக் குடிப்பார். காலைச் செய்தித் தாள்கள் முழுவதையும் படுக்கையில் அமர்ந்தபடி படித்து முடித்து விடுவார்.
அதன்பின் கண்ணாடி முன் அமர்ந்து தானே முகச்சவரம் செய்து கொள்வார். இன்னொரு காபி அருந்தி விட்டு எதையாவது கொஞ்ச நேரம் படிப்பார். அப்போது அவரது நேர்முக உதவியாளர் அவர் அறைக்குச் சென்று அவரது அன்றைய அலுவல்கள் என்னென்ன என்பதை
நினைவூட்டுவார்.காலை 8.30க்கு மேல் 9 மணிக்குள் மாடியிலிருந்து இறங்கி கீழ்த்தளத்துக்கு வருவார். முன் அனுமதி பெற்று அவரைச் சந்திக்க வந்திருப்பவர்களை ஒவ் வொரு வராக அழைத்துப் பேசு வார். அதன் பின் முதலமைச்சரைக் காண்பதற் கென்றே (முன் அனுமதி மெறாமல்) வந்திருப்பவர்களையும் ஒவ்வொருவராக அழைத் துப் பேசுவார்.
அதன்பின் அவரது “கடித உதவி யாளர்” வந்து முதலமைச் சருக்கு வந்துள்ள கடிதங்களை ஒன்றொன்றாக எடுத்துப் படிப்பார். பதில் எழுத வேண்டிய கடிதங்களுக்கு என்ன பதில் எழுத வேண்டும் என்று காமராசர் சுருக்கமாகச் சொல்லுவார்.
வரவேற்பு அறையை விட்டு எழும் முன், தனது உதவியாளரை அழைத்து வெளியே மேலும் யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்க்கும்படி சொல்வார். பொது மக்கள் யாராவது வந்திருந்தால் அவர் களை ஒவ்வொரு வராகச் சந்திப்பார்.
அதன்பின் மாடிக்குச் சென்று விடுவார். குளித்து சலவை செய்த உடைகளை அணிந்து கொண்டு தயாராகி விடுவார். அவர் கையெழுத்து போட வேண்டிய கடிதங்கள் டைப் செய்யப்பட்டு தயாராக இருக்கும். அவற்றைப் படித்துப் பார்த்து, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் திருத்தி மீண்டும் டைப் செய்து கையெழுத்து போடுவார்.
காலை 11 மணிக்கெல்லாம் கைக்குத்தல் அரிசிச் சாதம் சாப்பிடுவார்.
காலை 11.30க்கு கோட்டைக்குப் புறப் படுவார். கோட்டையிலும் பார்வை யாளர்கள் காத்திருந்தால் அவர்களை முதலில் சந்தித்து விடுவார்.
அதன்பின் அரசு அதிகாரிகள் அவரைச் சந்தித்து உரையாடுவார்கள். பகல் 1.30 வரை கோட்டையில் இருப்பார். அதன்பின் வீடு திரும்பி சற்றே ஓய்வு எடுப்பது உண்டு.
கோட்டையிலேயே பகல் 2 மணிக்கும் மேல் அலுவல் இருந்தால் 3 மணிக்கு 1 தோசை ஒரு காபி சாப்பிடுவார்.
மாலையிலும் காமராசரைப் பார்வை யாளர்கள் சந்திக்க முடியும். அதன்பின் மாலை நேர அலுவல்களில் கலந்து கொள்வார். அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கலந்து கொள்வார். காலம் தவறு வது அவருக்குப் பிடிக்காது.
மாலையில் வீட்டிலிருந்து புறப்படும் முன் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டுதான் புறப்படுவார். இரவில் திரும்பி வந்த பிறகும் ஒரு குளியல் உண்டு. இரவில் 2 அல்லது 3 இட்லிகளும் தேங்காய் சட்னியுமே அவரது உணவு. அதன்பின் ஒரு டம்ளர் பால். அதில் ஈஸ்ட் பவுடரும் தேனும் கலந்திருக்கும். அவருக்கு “சுகர்” வந்த பின் பாலுக்குப் பதில் “காம்பிளான் “அருந்துவார்.
அதன்பின் தனது படுக்கை அறைக்குச் சென்று படிக்க ஆரம்பித்து விடுவார்.
காமராசரிடம் பென்சிலோ பேனாவோ கிடையாது. ஏதாவது கையெழுத்து போடும் போது உதவியாளரிடம் பேனா வாங்கி கையெழுத்து போடுவார். கைக் கடிகாரமோ பாக்கட் கடி காரமோ அவர் வைத்திருந்த தில்லை. தனது சட்டைப் பையில் பணமும் வைத்திருப்பதில்லை.
மாலையிலோ காலையிலோ வேறு அலுவல்கள் இல்லை என்றால் ராட்டையை எடுத்து நூல் நுற்பதும் உண்டு.
ஒரு நாளில் 3 அல்லது 4 முறை உடைகளை மாற்றுவார். பளிச் சென்று சலவை செய்யப்பட்ட கதர் வேஷ்டி சட்டை துண்டு அணிவார். பனியனோ அண்டர் வேரோ அணிவதில்லை.
தினசரி 3 அல்லது 4 முறை குளிப்பார். அப்போது களையும் ஆடைகளை அவரே மடித்து உரிய இடத்தில் வைத்து விடுவார். பின் அவை சலவைக்கும் போகும். வேஷ்டியோ சட்டையோ கிழியும் வரை அவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் குளிர்ந்த நீரில் தான் குளியல். குளிர் காலத்தில் மட்டுமே வெதுவெதுப் பான இளம் வென்னீர்.
தலைக்கு எண்ணை தேய்த்துக் கொண்ட வழக்கமே இல்லை யாம்.
பலதரப்பட்ட புத்தகங்களை காமராசர் படிப்பதுண்டு. சில புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவதிலும் அவர் வல்லவர். அவரிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது காமராஜரின் குருநாதர் சத்தியமூர்த்தி. அவரது மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி காமராஜரை பற்றி உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.
அவர் கூறிய தகவல்கள் வருமாறு:_
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1930_ம் ஆண்டு நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் தேரடி வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்பா சத்தியமூர்த்தி சுதந்திர போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொப்டிருப்பார்.
அப்போது எனக்கு 5 வயது. நான் துள்ளி விளையாடும் பருவம். வீட்டில் அங்கும் இங்கும் விளையாடிக் கொப்டிருப்பேன்.
காமராஜர் அப்பாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவருக்கு 18 வயது இருக்கும். அவர் என்னிடம் அய்யா இருக்கிறாரா? என்று பணிவுடன் கேட்பார். அப்பாவை அவர் எப்போதும் அய்யா என்றுதான் அழைப்பார்.
நான் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் சென்று அப்பாவிடம் “அப்பா, அப்பா காமராஜர் உங்களை பார்க்க வந்துள்ளார்'’ என்று கூறுவேன். அவர் உடனே என்னிடம் மரியாதையாக பேசு அம்மா என்பார். ஏன் என்றால் நான் சிறுபிள்ளைதனமாக துடுக்குடன் அவர் பெயரை சொன்னதை அப்பா மரியாதை குறைவாக நினைத்து விட்டார்.
காமராஜரை அப்பா வீட்டுக்குள் அழைத்து பேசுவார். அவர்களது பேச்சு நாட்டை பற்றியும், நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை பற்றிதான் இருக்கும். நான் சிறுமியாக இருந்ததால் அப்போதைய நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி அதிகம் தெரியாது. சிறிது நேரம் காமராஜர் அப்பாவிடம் பேசி விட்டு சென்று விடுவார்.
அப்பாவை காமராஜர் எப்படி கவர்ந்தார்? என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். மதுரையில் அப்பா ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் அப்பாவின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான்.
அந்த சிறுவனை அப்பா கூட்ட மேடைக்கு அழைத்து உன் பெயர் என்ன? என்று கேட்டார். “என் பெயர் காமராஜர் அய்யா'’ என்று பணிவுடன் கூறினார். அப்பா “நீ என்னை சென்னையில் வந்து பார்'’ என்று கூறினார். இப்படித்தான் அப்பாவிடம் காமராஜருக்கு நெருக்கம் ஏற்பட்டது.
காமராஜர் அப்பாவை குருநாதராகவும், தன்னை சீடராகவும்தான் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது. அப்பாவுக்கு நம்பிக்கை உரியவர் ஆனார்.
1940_ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார்.
அப்பா தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார். இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. “உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக அப்பாவிடம் கேட்டார். அப்பா அவரிடம், “நாட்டின் நன்மையை கருதி நீங்கள்தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார். அப்பா கூறியதை தட்ட முடியாத காமராஜர் போட்டியிட்டார். தேர்தல் தியாகராஜநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடந்தது. அப்பா இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, “நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்'’ என்று கேட்டுக் கொண்டார்.
தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். அப்பா காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார்.
தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த அப்பாவின் தியாகத்தை பற்றி நான் சொன்னால் அது சரியாக இருக்காது.
காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அப்பா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55_வது வயதில் இறந்து விட்டார். அப்பாவின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.
காமராஜர் தன்னைப் பற்றியோ, தனது வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை என்னால் கூற முடியும்.
காமராஜர் முதல்_அமைச்சர் ஆனபிறகு தியாகராயநகரில் இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார். அவர் எங்களிடம் “என்னை பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்'’ என்று கூறுவார்.
ஒரு நாள் அவரது தாயார் சிவகாமி அம்மையார் எங்களது வீட்டுக்கு வந்தார். அம்மா பாலசுந்தரத்திடம் “விருதுநகரில் உள்ள வீட்டு சுற்று சுவர் இடிந்து உள்ளது. அதை தம்பி (காமராஜர்)யிடம் கட்டச் சொல்லுங்க'’ என்று சிவகாமி அம்மையார் உருக்கமாக சொன்னார்.
அம்மா அதை காமராஜர் வீட்டுக்கு வந்தபோது கூறினார். உடனே அவர், “முதல்_அமைச்சர் பதவிக்கு வந்த உடன் அவன் தன்னுடைய வீட்டு சுற்றுச் சுவரை கட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு கூறுவார்கள்'’ என்று அம்மாவிடம் கூறினார். இதை கேட்ட அம்மா மவுனம் ஆகிவிட்டார். இன்னொரு நாள் சிவகாமி அம்மையார் அம்மாவிடம் “எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம் செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்'’ என்று கூறினார்.
காமராஜர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு அம்மா கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக சென்று விட்டார்.
காமராஜரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். புவனேஸ்வரில் அவர் பதவி ஏற்பு விழா நடந்தது. எங்களை அவர் அந்த விழாவுக்கு அழைத்தார். நாங்கள் குடும்பத்துடன் ரெயிலில் சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டோம்.
அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த விழாவை நாங்கள் அவரது திருமண விழாவாக நினைத்து கொண்டோம்.
அவர் எங்கள் குடும்பம் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார். முதல்_அமைச்சராக இருந்தபோது அவரும், நாங்களும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தோம். ஆந்திர முதல்_மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலில் என்னுடைய மகன்கள் கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோருக்கு மொட்டை போட செய்தார்.
திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதைமணலில் காரின் “டயர்கள்'’ சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை. காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல்_அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அப்பா மீது அவர் அளவுகடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கோட்டையில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுப்பதற்காக அழைத்தது.
அவர் பூண்டி நீர்தேக்கத்துக்கு என்னுடைய குருநாதர் சத்தியமூர்த்தியின் பெயரை சூட்டினால்தான் வரவேற்பு பத்திரத்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறினார். அவர் கேட்டுக் கொண்டபடி சென்னை மாநகராட்சி பூண்டி நேர்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயரை சூட்டியது.
மாநகராட்சி வளாகத்தில் அப்பாவின் உருவச் சிலையை பிரதமராக இருந்த நேருவை அழைத்து வந்து காமராஜர் திறக்க வைத்தார். பின்னர் அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
எங்கள் தந்தையை குருவாக மதித்து, அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார்.குரு_சிஷ்யன்காமராஜரைப் பற்றி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேட்டி சத்தியமூர்த்திதான் காமராசரின் குரு. 1940_ல் த.நா. காங் கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராசர் இருந்தார். அவரது குரு சத்தியமூர்த்தி த.நா.காங்கிர சின் செயலாளர்.
வெள்ளைக்கார அதிகாரிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருந்த காலம் அது.
சென்னை மாநகர மேயராக இருந்த சத்தியமூர்த்தி சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினைக் காகப் பெரிய பெரிய திட்டங் களை எல்லாம் கொண்டு வந் தார். பூண்டி நீர்த்தேக்கத் திட்டம் அப்போது உருவானதுதான்.
மாநில அரசு அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. எனவே அப்போது சென்னை கவர்ன ராக இருந்த ஆர்தர் ஹோம் பூண்டி நீர்த்தேக்கத் திட்டத்துக்கு அஸ்திவாரக் கல் நாட்டினார். மேயர் என்ற முறையில் சத்திய மூர்த்தியும் விழாவில் கலந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி மீது காமராஜுக்கு வருத்தம் ஏற்பட்டது. சத்தியமூர்த்தியைப் போய் சந்தித்தார். “வெள்ளைக்கார கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டது ஏன்?'’ என்று கேட்டார்.
தண்ணீர் பிரச்சினை மிக முக்கியமானது. மேலும் நான் மேயர் என்ற முறையில்தானே கவர்னர் விழாவில் கலந்து கொண்டேன்'’ என்று சத்திய மூர்த்தி பதில் சொன்னார்.
“மேயராக இருந்தாலும் காங்கிரஸ்காரர்தானே. காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுதான் எனக்கு முக்கியம்'’ என்றார் காமராஜ்.
“நீ என்னப்பா சொல்ற? நடந்தது நடந்து போச்சு இப்போது என்னை என்ன செய்யச்சொல்ற'’ பதறினார் சத்தியமூர்த்தி.
“நீங்கள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டு த.நா. காங்கிரஸ் கமிட்டிக்கு உங்கள் கைப்பட எழுதிகொடுங்கள் மன்னிப்புக்கேட்டும் நீங்கள் எழுத வேண்டும்'’ காமராஜ் குரலில் உறுதி இருந்தது.
சற்று நேர அமைதிக்குப் பின் காமராஜ் கேட்டது போலவே ஒரு கடிதம் எழுதி சத்தியமூர்த்தி காமராஜ் கையில் கொடுத்தார். அதை காமராஜ் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்.
சில நாட்களில் டெல்லியில் இருந்து காமராஜருக்கு ஒரு தபால் வந்தது. காங்கிரசின் மேலிடத் தபால். சத்தியமூர்த்தி கவர்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது அது பற்றி எழுதவும்'’ என்பதுதான் சாராம்சம்.
“உண்மைதான்! ஆனால் மேயர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்திருக் கிறார் என்று த.நா.கா.க. தலைவர் என்ற முறையில் காமராசர் பதில் எழுதினார்.
அந்தப் பதிலோடு அந்த விஷயம் அப்படியே அமுங்கிப் போய் விட்டது.
3
காமராஜரின் பல தோற்றங்கள்
பெருந்தலைவர் காமராஜரை கட்சி கண்ணோட்டத்தோடு பார்க்ககூடாது. அவர் மாபெரும் சகாப்தம்.அவரை சிலர் சர்வாதிகார போக்கு கொண்டவர் என்பார்கள். அது தவறு. அவர் எல்லோர் கருத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவர்.
அன்றைக்கு பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு மறைந்த போது நேருவுக்கு பிறகு யார் பிரதமர் பொறுப்பை ஏற்பது என்று வந்தது.
அப்போது பெருந்தலைவர் அத்தனை எம்.பி.க்களையும் கலந்து ஆலோசித்து லால்பகதூர் சாஸ்திரியை தேர்வு செய்தார். அது, எல்லோருடைய கருத்தையும் கேட்டு அவர்கள் மனநிலை அறிந்து எடுத்த முடிவு.
அதே நேரத்தில் பெருந்தலைவர், காலத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மை கொண்டவர். நேரு மறைந்த போது, பெருந்தலைவர் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களின் கருத்துகளையும் அறிந்து முடிவெடுத்தது போல லால்பகதூர் சாஸ்திரி இறந்த போது அந்த முறையை கையாளவில்லை.
தேர்தல் மூலம்தான் பிரத மரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதை பெருந்தலைவர் ஏற்றுக் கொண்டார். இந்திரா காந்தி பிரதமராக வந்தார்.
பெருந்தலைவர் தோல்வியை கண்டு துவளாத மனம் கொண்டவர்.
இந்தியாவுக்கே வழி காட்டியாக இருந்து நேருவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரியை தேர்வு செய்து விட்டு தமிழகத்துக்கு வந்து தேர்தலை சந்தித்த பெருந்தலைவர் தோல்வியை தழுவினார் .
ஆட்சி தி.மு.க.வுக்கு கை மாறியது. அப்போது இமயத்தின் உச்சியில் இருந்து அதள பாதாளத்தில் தள்ளப் பட்ட நிலை பெருந்தலைவருக்கு ஏற்பட்டது. ஆனால் அவர் தோல்வியை கண்டு துவண்டு போய் விடவில்லை.
“மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு'’. இதை மனமுவந்து ஏற்று கொள்கிறேன். என்று சொல்லி தோல்வியை ஏற்றுக் கொண்டார். அந்த பக்குவத்தை வேறு எந்த தலைவரிடமும் நான் பாக்க வில்லை.
காமராஜர் காங்கிரஸ் கட்சியில் பலதரப்பட்டவர்களுடனும் இணைந்து ஒன்றர கலந்து விட்டவர்.
தேர்தலில் தோற்றபிறகு சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எல்லோரும், மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகள் இல்லை என்று யாருடனாவது கூட்டு சேரவேண்டும் என்று பேசினார்கள்.
அப்போது காமராஜருக்கு கோபம் வந்தது. ஏல, போறவனெல்லாம் போங்க! என்னை ஆளை விடுங்க யார் வேணுமானாலும் எங்கேயும் போய் சேருங்க என்று கோபமாக பேசினார்.
அந்த கூட்டத்தில் நானும் பங்கு கொண்டிருந்தேன். பெருந் தலைவர் ஆத்திரப்பட்டு பேசி விட்டதால் எல்லோரும் வெளியே போயிருவாங்க என்று நான் தலையை தொங்க போட்டுக்கொண்டு இருந்தேன். சுமார் 15 நிமிடம் அமைதி நிலவியது.
திடீரென பெருந் தலைவரே பேச ஆரம்பித்தார். நான் எதுக்கு சொல்றேன் தெரியுமா! என்றார். அவரை யாரும் பேச விடல்லை. 10 பேர் எழுந்து தேம்பி, தேம்பி அழுதனர். அதில் பணக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் உண்டு.
அவர்கள் எங்களுக்கு பதவி வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உங்களை விட்டு போக மாட்டோம். தப்பா பேசினால் மன்னியுங்கள் என்று சொன்னதும் கூட்டமே அழுதது.
இது கட்சியில் பலதரப்பட்டவர்களுடனும் காமராஜர் இணைந்து ஒன்றர கலந்து இருந்தார் என்பதற்கு சிறந்த சான்றாகும்.
கட்சியின் வெற்றி தோல் வியை விட மக்களின் வளர்ச்சியிலேயே காமராஜர் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
காமராஜர் அவருடைய ஆட்சி காலத்தில் சிமெண்டு ஸ்டீல், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்குரிய வகையில் இது போன்ற தொழிற்சாலைகளை தமிழ் நாட்டில் பல இடங்களில் தொடங்கினார்.
அன்றைய திட்ட கமிஷனிடம் போராடி பெல் நிறுவனத்தை பெற்றார்.
அன்றைக்கு காமராஜரின் வற்புறுத் தலின் பேரில் பெல் நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக மத்திய அரசில் இருந்து நிபுணர் குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்ய வந்தார்கள்.
தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் சுற்றுபயணம் செய்து விட்டு தங்கள் அறிக்கையில் அதற்குரிய இடம் இல்லை என்று தெரிவிப்பதற்கான நிலை இருந்ததால் அதை அன்றைய முதல்வராக இருந்த பெருந் தலைவரை நேரில் சந்தித்து கூறி னார்கள்.
அவர் ஏன்? என்ன சாத்தியகூறுகள் இல்லை? என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர்கள் தண்ணீர் நிறைய கிடைக்க வேண்டும். போக்குவரத்து வசதி வேண்டும், பல ஊர்களுக்கு ரெயில்வே தொடர்பு வேண்டும், மின்சார வசதி வேண்டும்.
பெருமளவுக்கு காலி இடம் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை கேட்ட காமராஜர் அப்படியா! என்று கூறி விட்டு சற்று நேரம் மவுனமாக இருந்தார். பிறகு அவர்களிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
நாளைக்கு திருச்சி போகி றீர்கள். அங்கு இருந்து தஞ்சை சாலையில் தஞ்சை வரை செல்கிறீர்கள். அங்கு போய் பார்த்து விட்டு வந்து என்னிடம் பேசலாம்! முடிவு பண்ணலாம் என்றார்கள்.
நிபுணர்களும் மறுநாள் திருச்சியில் இறங்கி தஞ்சை வரைக்கும் சென்று பார்த்து பிரமிப்படைந்தார்கள். பெருந் தலைவரிடம் தொடர்பு கொண்டு நாங்கள் நினைத்த இடம் அப்படியே இருக்கிறது என்று சொல்லி, ஏற்றுக் கொண்டார்கள்.
இப்படியாக மக்களின் வளர்ச்சி யிலேயே கண்ணும் கருத்தையும் செலுத்தினாரே தவிர காங்கிரஸ் கட்சியின் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத தலைவர் அவர்.
அவர் பதவியில் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி அனைவரிடமும் மனித நேயத்தோடு பழகி வந்தார். மற்ற வர்களும் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி ஒன்று போலவே நடத்தினார்.
இதையெல்லாம் எண்ணி தான் டெல்லியில் காமராஜர் சிலையை ராஜீவ்காந்தி திறந்து வைத்து பேசிய போது பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி காமராஜ் காமராஜ் தான் என்று கூறினார்.
ஆம் காமராஜருக்கு நிகரான தலை வரில்லை அவருக்கு நிகர் அவரே. ஒப்பில்லாத பெருந் தலைவருடைய எளிமையை கடைபிடிப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.
ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன் பெருந் தலைவரோடு பழகிய நாட்களில் கண்ட காமராஜரின் நற்பணபுகளை வாசகர்களிடம் நினைவு கூறுகிறார் எஸ்.கே.டி.ராமச்சந்திரன் இருந்தது. ஆனால் அவரை பார்க்க பரோலில் வரக்கூட மறுத்து, சுதந்திர போராட்டத்தில் உறுதியாக இருந்தார் காமராஜர்.
இதன்பின்னர் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். காமராஜரும் விடுதலையானார். விருதுநகருக்கு வந்த அவரை ஊர் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அவர்களிடம் பேசிய காமராஜர் “உங்களின் அளவற்ற அன்பை பெற்று இருப்பதால் நான் தலைக்கனம் பிடித்தவனாக மாறினாலும் மாறலாம் அல்லவா? அந்த மனநிலை ஏற்படாமல் இருக்க எனக்காக நீங்கள் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்'’ என்றார்.
அவரது அடக்கத்தை கண்டு மக்கள் வியந்து பாராட்டினார்கள். பின்பு, வீட்டுக்குள் சென்று தனது பாட்டியை பார்த்தார்.
பேரனை கண்டு மகிழ்ந்த பார்வதி அம்மையார் 2 நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார். பாட்டியின் மறைவு காமராஜரை பெருந்துயரில் ஆழ்த்தியது.
இதன்பின்னர் காமராஜர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே காம ராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முதன் முதலாக ஏற்ற முக்கிய பதவி.
காந்தி_இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் தேவைக் கான உப்பை தயாரித்து கொள்ள அரசு சம்மதித்தது. இதன்பின்னர் ஆங்கிலேய அரசு பிரதிநிதியாக இந்தியாவுக்கு வந்த வெலிங்டன் பிரபு இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.
அப்போது வெளிநாடு சென்று திரும்பிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். காரணமே இல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, காமராஜரும் கைதானார்.
இதைத்தொடர்ந்து 1933_ம் ஆண்டு சென்னை மாகாண சதி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காமராஜரும் சேர்க்கப்பட்டார். ஆனால், விசாரணையில், காமராஜர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இது போலவே, விருதுநகர் வெடிகுண்டு வழக்கிலும் காமராஜர் அவரது நண்பர்கள் முத்துச்சாமி, மாரியப்பன் ஆகியோரை சேர்த்து வழக்குகள் ஜோடிக்கப்பட்டன. இந்த வழக்கிலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது தெரிய வந்ததும் விடுவிக்கப்பட்டனர்.
காமராஜர் மீது ஆங்கிலேய அரசு வழக்குகள் போட்டு சலித்து போனது. ஆனால், காமராஜர் எதை பற்றியும் கவலைப்படாமல் சளைக்காமல் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
1936_ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காமராஜர் கட்சியின் செயலாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவரும், தோளோடு தோள் நின்று கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர். 1937_ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு சாத்தூர் எம்.எல்.ஏ. ஆனார். 1940_ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941_ம் ஆண்டு இந்திய மக்களை கேட்காமலேயே இந்தியாவை 2_வது உலகப் போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுத்தியதை கண்டித்து, போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது காமராஜர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் விருதுநகர் நகரசபைக்கு தேர்தல் நடந்தது. சிறையில் இருந்தபடியே இந்த தேர்தலில் போட்டியிட்டு, காமராஜர் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். காமராஜர் விடுதலை செய்யப்படும் வரை துணை தலைவராக இருந்து நகரசபை கூட்டத்தை நடத்தி வந்தார்.
பின்பு, காமராஜர் விடுதலை செய்யப்பட்டு விருதுநகர் திரும்பினார். நகரசபைக்கு அவர் வந்தபோது அங்கு நகரசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்தது.
துணைத்தலைவர் கூட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தார். காமராஜரை கணடதும் அவர் எழுந்து நகரசபை தலைவர் இருக்கையில் அமரும்படி காமராஜரை கேட்டுக் கொண்டார். தலைவர் இருக்கையில் காமராஜரும் அமர்ந்தார்.
அவரை பலரும் பாராட்டி பேச காமராஜரோ “என் குறிக்கோள் இந்திய விடுதலைக்காக பாடுபடுவதுதான். உள்ளூரில் இந்த பதவியில் இருந்து கொண்டு செய்ய நான் விரும்பவில்லை. இதை நீங்களே கவனித்து கொள்வது நல்லது.நீங்கள் அன்போடு அளித்த தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னை தவறாக நினைக்க வேண்டாம்'’ என்று கூறி பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார்.
விடுதலை போராட்டத்தில் அவர் கொண்டு இருந்த வேட்கை இதன்மூலம் தெரிய வந்தது. அவரை பாராட் டாதவர்களே இல்லை.
“வெள்ளையனே வெளியேறு'’ போராட்டத்தில் சிறை சென்ற காமராஜர் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி நிறைய புத்தகங்கள் படித்தார். இயற்கையாக அவரிடம் சேர்ந்திருந்த நுண்ணறிவுடன் நூலறிவும் சேர்ந்ததால் அவர் சிறந்த அரசியல் அறிஞர் ஆனார். காமராஜர் சிறையில் இருந்தபோதுதான் அவரது அரசியல் குரு சத்தியமூர்த்தி மறைந்தார்.
காமராஜர் திருமணமாகாதவர். அவருக்கென்று எந்த தொழிலும் கிடையாது. நாட்டு விடுதலைக்காக உழைப்பதையே அவர் தனது தொழிலாக கொண்டு இருந்தார். சிறந்த லட்சியவா தியான அவரை பொது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் மிகவும் மதித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி யில் காமராஜருடைய செல்வாக்கு உயர்ந்திருந்ததை போலவே, சட்ட சபையிலும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. காமராஜர் நினைத்தால் யாரையும் முதல்_அமைச்சராக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது நடந்த தேர்தலில் அமைச்சரவை அமைக்கப்பட்டு ஆந்திர கேசரி பிரகாசம் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்குள் அவர் காங்கிரஸ் கட்சியினரின் வெறுப்புக்கு ஆளானதால் அடுத்த ஆண்டே ஓ.பி. ராமசாமி என்பவரை காமராஜர் முதல் அமைச்சராக்கினார். இதன்பிறகு அவரது போக்கும் பிடிக் காமல் குமாரசாமி ராஜாவை முதல் அமைச்சராக்கினார், காமராஜர்.
இப்படி 4 ஆண்டுகளில் 3 பேரை முதல் அமைச்சராக்கும் அளவுக்கு காங்கிரசில் காமராஜரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. ஆனால், காமராஜர் வழக்கம்போல எளிமை யாகவே வாழ்ந்தார். அனைவரிடமும் இனிமையாக பழகினார்.
1947_ம் ஆண்டு மார்ச் மாதம் பிரகாசம் முதல் அமைச்சர் பதவியை இழந்தார். அந்த ஆண்டு ஆகஸ்டு 15_ந் தேதி தான் இந்தியாவுக்கு சுதந்திரமும் கிடைத்தது. இதற்கு பிறகுதான் காமராஜரின் செல்வாக்கும் ஓங்கியது. அவர் யாரை ஆதரித்தாரோ அவர்கள் முதல் அமைச் சரானார்கள். அவர் யாரை விரும்பவில்லையோ, அவர்கள் முதல் அமைச்சர் பதவியை இழந்தனர். அடுத்த தேர்தல் வரை இந்த நிலை நீடித்தது.
4
பதவியை விரும்பாத பெருந்தலைவர்(குமரி)
தொண்டு உள்ளத்துடன் தூய்மை யாக உழைப்பவர்கள் சுயநலமில்லாதவர்களே, அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
தான் முதல் _ அமைச்சராக முடியும் என்ற நிலை இருந்தும், பலரை அந்த பதவியில் உட்கார வைத்தவர், அவர். காங்கிரஸ் கட்சியை கட்டி காக்க வேண்டுமே என்பதற்காக தான் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு பணி புரிந்தார்.
அந்த பதவியிலும் அவருக்கு ஆசை கிடையாது. கட்சியில் தனக்கு எதிரணியில் இருந்த ராஜாஜியையும் முதல் அமைச்சராக்கி அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
அப்படிப்பட்ட காமராஜருக்கு முதல் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ராஜாஜி அறிவித்த புதிய கல்வி திட்டத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது, காமராஜரே முதல் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். நேரு போன்ற தலைவர்களும் இதையே நினைத்தனர்.
ஆனால் காமராஜர் தான் முதல் அமைச்சராக விரும்பவில்லை. ஆனால், தலைவர்களும், தொண்டர்களும், பொது மக்களும் அவரை விடவில்லை. இதனால் காமராஜர் ஒரு நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனை என்ன தெரியுமா?
“கட்சிக்காரர்களும், சட்டசபை உறுப்பினர்களும், எந்தவித சலுகைகளும், சிபாரிசும் கேட்டு என்னிடம் வரவே கூடாது. அதற்கு சம்மதித்தால் நான் முதல் அமைச்சர் பதவியை ஏற்க தயார்'’ இது தான் காமராஜர் விதித்த நிபந்தனை. இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பதவியின் மீது ஆசை இல்லாத காரணத்தால் தான் காமராஜரால் இப்படி துணிச்சலாக நிபந்தனை விதிக்க முடிந்தது. இதை போல நிபந்தனை விதித்து முதல் அமைச்சர் பதவியை ஏற்றவர்கள் இதுவரை யாருமே கிடையாது.
அமைச்சராக இருப்பவர்கள் சட்ட சபை உறுப்பினராகவோ, மேல் சபை உறுப்பினராகவோ இருக்க வேண்டும். காமராஜரோ எம்.பி.யாக இருந்தவர். அதனால் அவர், முதல் அமைச்சர் பதவி ஏற்ற 6 மாதங்களுக்குள் சட்டசபை உறுப்பினராகவோ, மேல் சபை உறுப்பினராகவோ ஆக வேண்டும்.
அவர் விரும்பி இருந்தால் மேல் சபை உறுப்பினராக நியமனம் பெற்று இருக்க முடியும். ஆனால், காமராஜர் ஜனநாயக முறையில் உறுதியான நம்பிக்கை கொண்டு இருந்ததால் குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேச நெஞ்சத்தை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன்- குமரி அனந்தன்
தளவாய்புரத்தில் ஒரு கூட்டம். அந்த கூட்டத்தில் நான் உடனிருக்கிறேன்.
அழகான ஊர். பெரியவர் பேசுகிறார். “மழையில்லை… பயிர் செய்ய முடியவில்லை. அதற்காக மாடுகளை விற்றுவிடாதீங்க… மழை வரும்போது மாடில்லாமல் என்ன செய்வீங்க?
கேரளாவுக்கு அடிமாடுகளாக மாடு களை விற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காமராஜர் கொடுத்த அறிவுரை இது.
தர்மபுரி மாவட்டத்தில் காமராஜரின் சுற்றுப்பயணம். ஏராளமான விவசாயிகள் காமராஜரை சுற்றி கூடியிருந்தார்கள்.
எங்கு பார்த்தாலும் மின் கம்பங்கள் நடப்பட்டு கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. மின்சாரம் கொடுக்கப்படவில்லை.
பெருந்தலைவர் பேசினார். “எல்லோரையும் பந்தியிலே உட்கார வச்சு இலையும் போட்டுடலாம். ஆனால் சமையலே ஆகலியே… சோரே இல்லாம இலையைப் போட்டு என்ன பிரயோசனம்னேன்…?
விவசாயிகளிடம் பேசும்போது அவர் களுக்குப் பழக்கமானவற்றையும், தொழில் அதிபர்களிடம் பேசும்போது அவர்களுக்கு எளிதில் பதியும் வகையில் பேசினார் காமராஜர்.
1971_ல் மகாக்கூட்டணி அமைத்து தேர்தலிலே காங்கிரஸ் போட்டியிட்டது. காமராஜர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலை அலையாக வந்து காமராஜர் பேச்சைக் கேட்டனர். ஆனால் காங்கிரஸ் வெற்றிபெற வில்லை.
இருப்பினும் கணிசமாக வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக கடற்கரையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த கூட்டத்தில் சோ பேசி முடித்த பின்னர் நான் பேசினேன். “இப்போது நமக்கு ஏற்பட்டிருப்பது தோல்வியல்ல. மக்கள் நம்மை தோற்கடிக்கவில்லை. உண்மையில் நான் தோற்கவில்லை.
வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த மாய மையை பயன்படுத்தி நம்மைத் தோற்கடித்து விட்டார்கள். இந்த மையால் முத்திரை குத்தும் போது நமது பெண் சுற்றும் இராட்டைச் சின்னம் மறைந்து அவர்கள் சின்னம்தான் தெரியும்.
அப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டனர். அதனால் வென்றது உன்`மை’ ஆம் உண்மை வெல்ல வில்லை. உன்`மை’ வென்றது. வாய்மை வெல்லவில்லை. பொய்`மை’ வென்றது என்று பேசி னேன்.
கடற்கரையே அதிரும்படி கூட்டத்திலிருந்து கையொலி எழுந்தது.
கொஞ்சம் நாட்கள் கழிந்தன. திருமலைப்பிள்ளை வீதி… பெருந்தலைவர் வீடு… மூத்த படப்பிடிப்பாளரும் காமராஜரிடம் மிக உரிமையோடு நட்பு கொண்டவருமான கணபதி வந்தார்.
பெருந்தலைவரோடு பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று என்னை பார்த்தவுடன், “ஆமாம் காமராஜ் (இப்படி உரிமையுடன் அழைப்பார்) இந்த குமரி அனந்தன் பேசும் கூட்டத்தில் எல்லாம் `மாய மை’ அது, இது என்று பேசுகிறானே, அது பற்றி நீ(ங்கள்) எதுவுமே சொல்ல வில்லையே'’ என்று கேட்டார்.
அதற்கு கலகலவென்று சிரித்த காமராஜர் கணுக்கால் வேட்டியை கையால் சிறிதே மேலேற்றிக் கொண்டே “அவன் சொல்றாண்ணேன்… கூட்டத்தில் பேசும்போது அவன மாதிரி கட்சிக்கு உழைக்கிறவங்க உள்ளவங்க, கைதட்டிவரவேற்கிறார்கள்.
அவங்களுக்காக நம்ம தோக்கல்ல.. ஏமாத்திட்டாங்க… அடுத்த முறை முன் எச்சரிக்கையா, ஜாக்கிரதையா, நாம இருந்தா ஏமாத்த முடியாது.
நம்ம ஜெயிச்சிரலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுறதுக்கு அவன் பேசலாம்ணேன்…
அதையே நான் பேசினா அது செய்தியாகிப் போகும்னுனேன். அடுத்த நாட்டுக்கு இந்தப் பேச்சு போனா என்னாகும்ணேன், மோசடியா தேர்தல் நடத்திருக்குன்னு நினைப்பாங்களா?'’ இல்லையா!
“என் கட்சி தோற்கலாம். ஆனால் தேசத்திலே தேர்தலே மோசடி… ஜனநாயகமே பொய்யானதுன்னு அடுத்த வன் நினைப்பானே.
என் தேசத்துக்கு இப்படி அவப் பெயர் வரலாமா? சொல்லு… என்று கணபதியிடம் கேட்டார்.
அப்போது மட்டுமல்ல இப்போதும் தேசத்திற்கு இம்மியளவும் மாசுவரக் கூடாது என்று எண்ணிய அந்தத் தேச நெஞ்சரை எண்ணியெண்ணி நான் உள்ளம் நெகிழ்கிறேன்.
5
காமராஜரைப்பற்றி… அறிஞர் பெருமக்கள்
திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். நேரு.
“மீண்டும் நான் பாரத நாட்டுக்கு வரும்போது சென்னைக்கு விஜயம் செய்யும்போது தாங்களே முதலமைச்சராக இருப்பீர்கள்.”
இங்கிலாந்து நாட்டு ராணியின் கணவர் எடின்பரோ
“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”
காஞ்சி சங்கராச்சாரியார்
“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?”
_ தந்தை பெரியார்.
“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”
_ இந்திரா காந்தி
காமராஜ் ஒருவர்தான் பாரத நாட்டில் என்னைக் கவர்ந்த தலைவர்.
_ அமெரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர்
சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்.
_ சுப்பிரமணிய அய்யர்
காமராசர் இருந்த காலம் தமிழகத்தின் பொற்காலம். அதன் பலனை அதன் தொடர்ச்சியைத்தான் இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
_ ஒரு அரசியல் அறிஞர்
காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி
_ எம்.ஜி.ஆர்.
தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்.
_ கலைஞர் கருணாநிதி
பள்ளிக் குழந்தைகளுக்குப பகல் உணவு அளிக்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதுமை. அதை இங்கேதான் (சென்னையில்) காணுகின்றேன். இதன் மூலம் ஏழைக்குழந்தைகளின் தற்குறித்தனம் அற்றுப்போகும் என்பது என்னுடைய நம்பிக்கை.
_ பிரதமர் ஜவஹர்லால் நேருஜி
தமிழ்நாட்டின் கிராமங்கள் முன்பு பார்த்ததுபோல் இல்லை. அவர்கள் இல்லங்களில் மின்சார ஒளியும், முகத்தில் அறிவு ஒளியும் வீசுகின்றன. குறிப்பாக பெண்கள் கல்வியில் சென்னை அதி உன்னதமாக வளர்ந்திருக்கிறது.
_பிரதமர் ஜவஹர்லால் நேருஜி
கல்வி, மின்சாரம் போன்ற துறைகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டியவைகளாகும்.
_குடியரசுத் தலைவர் திரு. ராஜேந்திரபிரசாத்
சமுதாய நலத்திட்டத்திற்கான மத்திய அரசின் மானியத்தப் பூரணமாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரே மாநிலம் இந்தியாவிலேயே சென்னைதான்.
_குல்சாரிலால் நந்தா
பிற எல்லா மாநிலங்களையும் விட மின்சாரத் திட்டங்களை அதிக அளவில் (உற்பத்தி செய்து) உபயோகித்திருப்பது சென்னை மாநிலம் ஒன்றே
_எஸ்.கே.பட்டீல்
அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும், திட்டங்கள் போன்ற பெரும்பணியிலும் ஊழல்கள் குறைந்து, திறமை அதிகம் காணப்படும் ஒரே மாநிலம் சென்னை.
_பிரதமர் ஜவஹர்லால் நேருஜி
உணவு உற்பத்தி துறையில் சென்னை தன் நிறைவு பெற்று விட்டது “இது என்றுமில்லாத இமாலயச் சாதனை'’
_ எம்.வி.கிருஷ்ணப்பா
விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதிலும், கூட்டுறவு இயக்க வளர்ச்சியிலும் முன்னணியில் நிற்பது சென்னை.
_மொரார்ஜி தேசாய்
காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.
_மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
காமராஜ் அரசு மக்களைப் புரிந்து கொண்டு ஆட்சி நடத்துகிறது. இங்குள்ள மக்கள் அரசாங்கத்தின் மீது நல்ல நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மந்திரி சபையில் தகராறு கிடையாது. அரசியல் குமுறலுக்கு இடமில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அமைதியாகவும், திறமையாகவும் ஆட்சி நடக்கிறது.
மத்திய அமைச்சர் ஏ.எம்.தாமஸ் சாத்தூரில் பேசியது)
மதிய உணவுத்திட்டம் ஆசிரியர்களின் சம்பள உயர்வு, ஆசிரியர்களுக்கு பென்சந் வசதிகள் முதலியவை மற்ற மாநிலத்தில் இல்லாத திட்டம். அவைகள் இந்த மாநிலத்திலிருந்து பிற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதாகும்.
6
காமராஜரின் பொன்மொழிகள்
* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்
* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது
* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து
* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.
* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்
* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர் களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்
* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
* நான் வட இந்தியாவைப்ம் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு தேசம்தான், ஒரு சக்திதான்.
* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை
* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது
* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்
* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்
* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது
* நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது'’
* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்
* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.
* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.
* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது
* ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து மீ்ட்க்க முடிந்த மட்டும் பாடுபடு வேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை
* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்
* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்
பதவிப்பிரமாணத்தின் போது காமராஜர் சொன்னது
தியாக தீபம் ஒளிவீசும் நினைவாலயம்
தமிழர்களின் வாழ்வை பசுமையாக்க ஒரு ஜீவ நதி வாழ்ந்த இடம். எத்தனையோ முடிவுகளை யோசித்த தியாக இடம். நெருக்கடியை நினைத்து மனம் வெம்பிய இடம் தியாகமும், வீரமும், விவேகமும், கடமையும், நாட்டுக்கென தமிழர் வாழ்வுக்கென அர்ப்பணித்த கர்மவீரர் வாழ்ந்த இடம்.
தமிழர்களின் எதிர்காலம், இடிந்துபோக இருந்த இந்தியாவை தாங்கிபிடித்த வீரமைமிக்க தோள்கொண்ட அஞ்சா நெஞ்சம் கொண்ட தமிழர்களின் தங்க மகன் கருப்பு வைரம் நடந்த இடம்.
ஜனநாயகத்தின் தூணாக வலம் வந்த மாளிகை. நாடே என் குடும்பம் என்று வாழ்ந்தவனின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமியாம் தியாகச் சுடராய் ஒளி வீசும் ஆலயமாக இருக்கிறது பெருந்தலைவர் காமராஜரின் நினைவு இல்லம்.
ஆம், தமிழகத்தின் உதய காலமாய் வலம் வந்த கர்மவீரர் வாழ்ந்த வீடு சென்னை தியாகராயநகர் திருமலைச் சாலையில் கம்பீரமாக காட்சி தருகிறது.
இல்லத்தின் முகப்பிலேயே எழுப்பப்பட்டிருக்கும் காமராஜர் சிலை… இல்லை, இல்லை காமராஜரே நம்மை பார்த்து வரவேற்கிறார்.கர்ப்பகத்தருவாய் தாயின் இதயத்தோடும் தலைவனின் போர்க் குணத்தோடும் உலாவந்த அந்த இல்லத்தின் முன்பு தென்னை மரங்களும், மாமரங்களும் சில்லென காற்றை இனிமையாக வாசித்துக் கொண்டிருக்கும்.
நம் பாதங்களை அந்த மண்ணில் பட்டவுடனே நம் இதயத்துக்குள் மெய் சிலிர்க்கும் உடலை புல்லரிக்கச் செய்யும்.
இந்தியாவின் மூன்று பிரதமர்களை உருவாக்கிய இமயம் வசித்த வீடல்லவா? அது.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கம் காமராஜரின் அறிவுச் சுரங்கமாக திகழ்ந்த நூலகம். நூலகத்துக்குள்தான் எத்தனை புத்தகங்கள்.
அவர் படிக்காத மேதையல்ல. படித்த மேதைதான் என்பதற்கு சான்றாக நூலகம் காட்சியளிக்கிறது.
நம் தேசத்தின் தலைவர் காமராஜர் தமிழர்களின் வாழ்க்கையை கற்றார். அனுபவங்களை திரட்டி திரட்டி தனக்குத்தானே பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டார்.
தமிழ் இலக்கியங்களை கற்றார். பாரதியின் கவிதைகளை படித்தார். காந்திய நூல்களையெல்லாம் கரைத்து குடித்து இருக்கிறார். சுயசரிதை நூல்களையெல்லாம் ஒன்று விடாமல் வாசித்திருக்கிறார்.
நேருவின் நூல்கள், ஆங்கில மேதைகளின் அனுபவ நூல்கள், ஆங்கில இலக்கிய நூல்கள் என்று அவர் படிக்காத நூல்களே இல்லை. நூலகத்தையே பல்கலைக்கழகமாக மாற்றி படித்து இருப்பது நூலகத்தை பார்க்கும்போது நம் புலன்களுக்கு புலப்படுகிறது.
இடது பக்க அறை நம் இதயம் நின்று விடக்கூடிய அறை. அந்த அறைதான் காமராஜரின் படுக்கையறை.
நம் கண்களை குளமாக்கும் அறைதான் இது. உலகத்தையே அழ வைத்த அறை. காமராஜரின் குளுகுளு அறை.
தமிழர்களை மூச்சு திணற வைத்த ஒரு தியாகத் தீபம் வாழ்ந்து கொணடிருக்கும் அறை. இந்திய மக்களையே கண்ணீரில் தத்தளிக்க வைத்தஅறை.1975 அக்டோபர் 2-ல் என் உடம்பெல்லாம் வியர்க்கிறதே! ஏர் கண்டிஷன் அறையில் இப்படி வியர்க்கிறதே?’என்று காமராஜர் மருத்துவரிடம் சொல்லி விட்டு உதவியாளரிடம் விளக்கை அணைத்து விட்டு போகும்படி சொன்ன அறை.
தமிழகத்தையே மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டுப்போன அந்த அறையில்தான் காமராஜர் படுத்து தூங்கிய கட்டிலும் மெத்தையும், கடைசியாக படித்த ஆங்கில நாளிதழும், தமிழ் வார இதழும், அவரது கால்களை சுமந்த செருப்புகளும் நம் கண்களை பனிக்கச் செய்கின்றன.
அந்த அறையிலிருந்து கண்ணீர் பூக்களால் காமராஜருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அடுத்தப் பக்கம் சென்றால் அகலமான `ஹால்’ சற்றும் நம் இமைகளை நிமிர்த்தினால் காமராஜரின் புகழைப் போற்றும் புகைப்படங்கள்.
புகைப்படங்கள் ஒவ்வொன்றும் காமராஜரின் வரலாற்றை தெரிவிக்கும் கல்வெட்டு சாசனம். முதலில் நம் கண்களுக்கு ஆச்சரிய குறியாக இருப்பவர் பெருந்தலைவரின் அன்னை சிவகாமி அம்மாள்.
தியாக பூமிக்கே தன் மகனை சுடர வைத்த தெய்வத் தாயாக நம்மை பார்த்து புன்னகைப்பார் அன்னை சிவகாமி அம்மாள்.
அடுத்ததொரு புகைப்படம் முதல் முறையாக சிறை சென்று மீண்டு வந்த தலைவர் காமராஜர் தொண்டர்கள் கொடுத்த வரவேற்புடன் ஒரு புகைப்படம். இந்தியாவின் விடுதலைக்காக காமராஜர் பட்ட விழுப்புண்களை நம் நினைவுகளுக்கு கொண்டு வரும் சம்பவமாக அமைந்திருக்கும் அத்தாட்சி படம்தான் அந்த புகைப்படம்.
தன்னுடைய ஐந்து வயதில் பள்ளிக்கூட குழந்தைகளுடன் காமராஜர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் தொடங்கி தனது அரசியல் குரு சத்தியமூர்த்தி, ஜவகர்லால் நேரு, சீக்கிய தலைவர் சான்பதேசிங், ராஜாஜி, ஓ.பி. ராமசாமி ரெட்டியார், நீலம் சஞ்சீவிரெட்டி, ராஜேந்திர பிரசாத் ஆகியோருடன் எடுத்து கொண்ட படங்களுக்கு நடுவே அவர் முதன் முதலில் தமிழக முதல் அமைச்சரானபோது தன்னுடைய
இவற்றுக்கெல்லாம் அச்சாரமாய் ஒரு புகைப்படம். அதுதான் காமராஜரும், இந்திரா காந்தியும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்த அற்புதக் காட்சி.
லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பின்னர் இடிந்து போக இருந்த இந்தியாவை இமயம் போல் தூக்கி நிறுத்தி இந்திரா காந்தியை இந்தியாவின் பிரதமராக்கிய `கிங் மேக்கர் காமராஜரை’ அந்த புகைப்பட காட்சி பொங்கி வரும் பூம்புனலாக காட்சியளிக்கிறது.
ஒரு புகைப்படம் வித்தியாசமாக கிடைத்துள்ளது. காமராஜர் ஒரு குழந்தைக்கு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார். பதிலுக்கு அந்த குழந்தையும் காமராஜரைப் பார்த்து கும்பிடுகிறது.
இந்த அரிய காட்சி வாழ்கின்ற தலைமுறையும், வருங்கால இளைய தலைமுறையும் காமராஜரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நம் ரத்த நாளங்களுக்கு தெரிவிக்கும் செய்தியாகும்.
இந்திய தலைவர்கள் மட்டுமல்ல தான் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டு தலைவர்களின் இதயத்திலும் இடம் பிடித்த தலைவராக விளங்கியவர் காமராஜர். இதை விவரிக்கும் வகையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம், வினோபாஜி, ஈ.வி.கே. சம்பத் ஆகிய பெருந்தலைவர்களுடன் காமராஜர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் புகைப்படங்களாக பார்ப்பவர் கண்களுக்கு திரைப்படமாக ஓடுகிறது.
ரஷிய நாட்டு சுற்றுப்பயண புகைப்படங்கள் காமராஜரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
எல்லோரையும் ஆச்சரியத்துடன், ஆனந்தத்துடன் பார்க்க வைக்கும் படமாக காமராஜர் குற்றாலத்தில் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் படக்காட்சி.
பரந்து விரிந்த மார்புடன், திரண்ட தோள் வலிமையுடன் உல்லாசமாக மேலாடை இன்றி கதர் வேட்டியுடன் அவர் குளிக்கும் காட்சி காமராஜரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதும், கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டு கயிறு இழுக்கும் காட்சியும், குழந்தைகளோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் மிகவும் அரிதானவை.
தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளே இந்த தமிழ் மகனை உச்சிமுகர்ந்து பாராட்டியதற்கு அடையாளமாக ஏராளமான புகைப்பட சான்றுகள்.
ரஷியாவில் லெனின்கிராட் சமாதியில் காமராஜர் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தும் அற்புத காட்சி, இலங்கை பிரதமராக இருந்த சிரிமோவோ பண்டாரநாயகா, ரஷிய தலைவர் நீரோஷிவோ, எத்தியோப்பிய மன்னர், நேபாள நாட்டு மன்னர், ரஷிய தலைவர் கோஷிஜின், இங்கிலாந்து அரசி ராணி எலிசபெத், பாகிஸ்தான் நாட்டு தலைவர் பூட்டோ, மார்ட்டின் லூதர்கிங் என உலக நாட்டு தலைவர்களெல்லாம் காமராஜரை சந்தித்தது தமிழனுக்கு பெருமைத் தரக்கூடிய கண்களால் அள்ளிக்கொள்ள முடியாத ஆனந்த காட்சிகளாகும்.
கதர் வேட்டியுடன் கிரம்லின் மாலிகையில் சென்ற ஒரே மனிதர் பெருந்தலைவர் ஒருவரே.
இல்லத்தின் கீழ்தளத்தில் காமராஜரின் நினைவுகளை தரிசித்து விட்டு மாடிப்படிகள் வழியாக மேல்தளத்துக்கு செல்ல வேண்டும்.
படிக்கட்டில் நம் கால் ஓசை கேட்கும்போது காமராஜர் இந்த படியில்தானே கால் வைத்து நடந்து சென்று இருப்பார். இந்தியாவை அளந்த அந்த மாமனிதரின் கால்தடம் இதில் பதிந்து இருக்குமோ என்று கண்களால் அந்த படிக்கட்டுகளை ஒத்திக்கொண்டு மேலேறினால் மனசை நெகிழச் செய்யும் காட்சி அது.
காமராஜர் உருவம், மேல்தளத்தின் வாசலுக்குள் நுழைந்ததும் எதிரே கண்களால் பார்த்தால் கண்ணாடி பேழைக்குள் காமராஜரின் உருவம் நம்மை அதிரவைக்கிறது.
காமராஜரின் முகம் முழுவதும் நம் இதயத்துக்குள்ளே பேசிக் கொண்டிருப்பதால் அந்த கண்ணாடி பேழைக்குள் காமராஜரின் கதர் சட்டையும். கதர் வேட்டியும் உடுத்தியிருந்ததுபோல் வைத்திருக்கிறார்கள். தோளில் துண்டு கிடப்பது போல் துண்டையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.
இந்த கதர் சட்டையும், இந்த கதர் வேட்டியும், இந்த கதர் துண்டும் தமிழர்களின் இதயத்தில் உயிரோவியமாக உலா வரும் அந்த கருப்பு நிலா கடைசியாக உடுத்தி இருந்தது.
அந்த கண்ணாடி பேழைக்குள் இந்த காட்சியை பார்க்கும்போது காமராஜர் எழுந்து வந்து நம்மிடம் பேசுவது போல் இருக்கும்.
அந்த அறையில் காமராஜர் ஓய்வு எடுக்கும் மெத்தையும், சோபாசெட்டும் அப்படியே நம்மை பார்க்கும்.
கீழ்தளத்தில் உள்ள கண்ணாடி பேழையிலும் மேல் மாடியில் உள்ள கண்ணாடி பேழையிலும் காமராஜரின் கதர் ஆடைகள், அவருக்கு அன்பாக வழங்கப்பட்ட எளிமையான பரிசுப் பொருட்கள், அவர் பயன்படுத்திய பேனாக்கள், பென்சில்கள், துப்பாக்கி, கடிகாரம், டேப்ரிக்கார்டர்,ஷேவிங் செட், பிரஷ், சில்லறை நாணயங்கள், ஜாதகம், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது டெல்லியில் பயன்படுத்திய பொருட்கள், சமையல் பாத்திரங்கள், சாப்பாட்டு பாத்திரங்கள், ஷேவிங் கிரீம் இவையெல்லாம் இன்னும் காமராஜர் பெருமையை போற்றும் வகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
மற்றொரு கண்ணாடி பேழைக்குள் எல்லோரையும் இது என்ன என்று கேள்வியை கேட்க வைக்கும் `சாந்து கரண்டி’. கொத்தனார்கள் வீடு கட்ட பயன்படுத்தும் கரண்டிகள் நூற்றுக்கணக்கானவை உள்ளன.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தின் ஏற்றத்துக்காக, பொருளாதார தொழில் வளர்ச்சிக்காக, குழந்தைகளின் கல்வி கண்களை திறக்க பள்ளிக்கூடங்கள் என்ற பல்வேறு நலத் திட்டங்களுக்கு காமராஜர் அடிக்கல் நாட்டிய சாந்து கரண்டிகள்தான் அவை.
அடுத்த கண்ணாடி பேழை அறைக்குள் அடுத்த ஒரு அதிர்ச்சி. நூற்றுக்கணக்கான கத்தரிக்கோல். இவையெல்லாம் காமராஜர் பயன்படுத்தியது. அடிக்கல் நாட்டியதையெல்லாம் அவர் கைப்பட திறந்து வைத்த சான்றுகள்தான் கத்தரிகோல்கள்.
இவற்றையெல்லாம் பார்த்து விட்டு நாம் வெளியே வரும்போது நம்மை மீண்டும் திரும்ப பார்க்க வைக்கிறது ஒரு சுவர்.
அந்த சுவரில்தான் தமிழகத்தில் கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு வந்த காட்சி. தமிழகம் தன் இறைவனை இழந்து விட்ட துயரக் காட்சி கண்களில் கண்ணீர் பெருந்துளியாகிறது.
ஊருக்கு உழைத்தவன் உறங்கிக் கொண்டிருந்த காட்சி. இந்தியாவுக்கே வழிகாட்டிய ஒளி விளக்காக சுடர் விட்ட அகல்விளக்கின் உயிர் சுடர் அணைந்து விட்ட சோககாட்சி புகைபடமாய் இதயத்தில் சோகத்தை ஏற்படுத்தும்.
பிரதமராக இருந்த இந்திராக காந்தி அன்று தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, கவர்னராக இருந்த கே.கே. ஷா, சஞ்சீவிரெட்டி, பக்தவச்சலம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்ற காட்சிகள் இதயத்தையே கரைக்கின்றது.
தமிழர்களின் இதயத்தில் காற்றாக கலந்து விட்ட பெருந்தலைவர் காமராஜரை இல்லத்தில் தரிசித்து விட்டு வெளியே வரும்போது காமராஜர் காமராஜர் என்று நம் இதயம் துடிக்கும்.
இன்று தொடங்கும் காமராஜரின் நூற்றாண்டு தினத்தில் காமராஜரைப் போல் தியாகத்துடனும், நேர்மையுடனும் அரசியலில் தூய்மையுடனும், எளிமையுடனும் ஆடம்பரம் இன்றி வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் என இதயத்தில் தழலாக லட்சிய உறுதியை எடுத்துக் கொள்வோம்.
தாய்பாசம்
காமராசர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை குமாரசாமி நாடார் காலமாகி விட்டார். எனவே தாயார் சிவகாமி அம்மையார்தான் காமராசரையும் அவர் தங்கையையும் வளர்த்தார்.
சிவகாமி அம்மையார் விருது நகரில் குடியிருந்தார். காமராசர் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார். முதல்-அமைச்ச ராகஇருந்தபோதுதாயாருக்கு மாதம் ரூ. 150 மட்டும் மணியார்டர் மூலம் அனுப்பி வைப்பார்.
காமராசர் விருதுநகருக்கு போகும் போதெல்லாம் தாயாரைச் சென்று சந்திப்பதில்லை. பயணிகள் விடுதி (டிராவலர்ஸ் பங்களா)யில் தங்கிக் கொள்வார். மதுரையைக் கடந்து விருதுநகர் வழியாக காரில் நெல்லை நாகர்கோவில் போக நேரிடும் போதும் காமராசர் விருதுநகரில் தன் வீட்டுக்குச் சென்றதில்லை.
விருதுநகர் வழியாக ஒருமுறை பிரதமர் ஜவஹர்லால் திறந்த காரில் சென்றார். சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்! அப்போது கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் நேருவின் அருகே சென்று அதோ கூட்டத்தில் நிற்கிறாரே அவர் தான் சிவகாமி அம்மையார் என்று சொல்ல, நேரு காரை விட்டு இறங்கி சிவகாமி அம்மையாரிடம் சென்று நலம் விசாரித்தார்.
காமராசர் 9 ஆண்டுகள் முதல்-அமைச் சராக இருந்தபோது ஒரே ஒருமுறைதான் அவரது தாயார் சென்னைக்கு மகன் வீட்டிற்குச் சென்றார். திருப்பதிக்கு போய் சாமி கும்பிடணும் என்று தாயார் சொல்ல, போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு காமராசர் கோட்டைக்குச் சென்று விட்டார்.
காமராசரின் நேர்முக உதவியாளர் ஒரு தொழில் அதிபரின் காரில் சிவகாமி அம்மையாரைத் திருப்பதிக்கு அனுப்பி வைத்தார். அந்த விஷயம் தெரிய வந்த போது காமராசர் கோபப்பட்டு உதவியாளரைக் கடிந்து கொண்டார்.
கோபிச்செட்டிபாளையத்தில் காங்கிரஸ் மாதர் மாநாடு ஒன்று நடந்தது. இந்திராகாந்தி (அப்போது பிரதமராக அவர் இல்லை)யும் கலந்து கொண்டார். காமராசருக்குச் தெரியாமல் கோபி காங்கிரஸ் தலைவர்கள் சிவகாமி அம்மையாரையும் அழைத்து வந்திருந்தனர். தட்டுத் தடுமாறி அவர் மேடையில் ஏறும்போதுதான் தாயாரை காமராசர் கவனித்தார்.
தனது நேர்முக உதவியாளரை அழைத்த காமராசர் “இவங்க எங்கே இங்கு வந்தாங்கன்னேன். விழா முடிஞ்சதும் நல்லபடியா அனுப்பி வைங்கன்னேன்’ என்று கூறினார். தாயார் அருகே செல்லவும், இல்லை. பேசவும் இல்லை.
ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர்.
காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.
வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, “சௌக்கியமா அம்மா'’ என்று காமராசர் கேட்டார்.
தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது.
முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, 1967 தேர்தலில் காமராசர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டார்.
அதன்பின் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது சென்னையில் இருந்த காமராசருக்கு, சிவகாமி அம்மையாருக்கு உடல் நலமில்லை என்று சேதி சொன்னார்கள்.
உடனே புறப்பட்டு விருதுநகர் வந்தார். (அப்போது மதுரை நெடுமாறன் பெருந் தலைவருடன் வந்தார்) தாயாரைக் கண்டார். மகனைக் கண்டவுடன் அந்த தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.எனவே காமராசர் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.
தாயாரிடம் சொன்னார். போயிட்டு வாப்பா. ஆனால் நம் வீட்டில் சாப்பிட்டு விட்டுப்போ என்றார், அந்த தாயார் படுக்கையில் படுத்தபடி.
சரி சொன்ன காமராசர் அன்று தன் வீட்டில் சாப்பிட்டார். தாயாருக்கு அது பரம திருப்தி. தாயிடம் விடை பெற்ற பின் சென்னைக்கு புறப்பட்டார். உடன் பயணம் செய்த நெடுமாறன் “நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆயிற்று?'’ என்று கேட்டார்.
சற்றே கண்ணை மூடிக்கணக்கு போட்ட காமராசர் நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருஷமாவது இருக்கும் என்றார்.தாயும் மகனும் 1942 ஆகஸ்ட் மாதம் பம்பாய் மாநகரில் அகில இந்திய செயற்குழு கூடியது. காமராஜ், சத்திய மூர்த்தி, பக்தவச்சலம் முதலியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்தனர். “வெள்ளையனே வெளியேறு'’ போராட்டம் அந்தச் செயற்குழுவில்தான் அறிவிக்கப்பட்டது.
மறுநாளே காந்தியடிகள், நேரு போன்ற தலைவர்களை வெள்ளைக்கார அரசு கைது செய்தது. மாநிலம் வாரியாக பிரபலங்களைக் கைது செய்யவும் முடிவு செய்தது.
ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்ட காமராஜ் நேரடியாகச் சென்னை சென்றால் வழியிலேயே கைது செய்யப்படலாம் என எதிர் பார்த்தார். தான் கைதாகும் முன் செயற்குழு முடிவைத் தமிழகம் எங்கும் அறிவித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆந்திராவில் ரெயிலை விட்டு இறங்கி சில நாட்கள் தங்கினார். பின் சென்னைக்கு ரெயில் ஏறி னார். அரக்கோணம் ஸ்டேஷனிலேயே இறங்கினார். ஸ்டேஷன் பிளாட்பாரம் முழுக்க போலீஸ். அவர்கள் காமராஜை எதிர் பார்க்கவில்லை. அவர்கள் வேறு குறியாக இருந்ததால் காமராஜை கவனிக்க வில்லை.
காமராசர் அரக்கோணம் சோளங்கி புரம் ராணிப்பேட்டை கண்ணமங்கலம், வேலூர், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்குப் போனார். ஒவ்வொரு ஊரிலும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக ராமநாதபுரம் சென்றார். பின் அங்கிருந்து மானாமதுரை வழியாக விருது நகருக்குச் சென்று தனது தாயாரைச் சந்தித்தார்.
தலைவர், வீட்டுக்கு வந்திருக்கும் விஷயம் வெளியே தெரிந்து பிரமுகர்கள் அவரைத் தேடி வந்தனர். எனவே விருதுநகர் காவல் நிலையம் வரை விஷயம் பரவிற்று. அப்போது விருதுநகர் காவல் நிலையத்தில் எழுத்தச்சன் என்பவர் சப் இன்ஸ்பெக்டர்.
தன்னை எந்த நேரமும் கைது செய்து விடுவார்கள் என்பது காமராசருக்குப் புரிந்தது. தன்னைப் போலீஸ் கைது செய்யும்போது தொண்டர்கள் ஆவேசப் படலாம் என்றும் எதிர் பார்த்தார். உடனே விருதுநகர் காவல் நிலையத்துக்கு “நான் வீட்டில்தான் இருக்கிறேன்! கைது செய்யலாம்'’ என்று தகவல் அனுப்பினார்.
சப் இன்ஸ்பெக்டர் எழுத்தச்சன் தலைவர் வீட்டுக்கு வந்தார். “ஐயா! கைது செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. நீங்கள் இப்போது அரியலூரில் தங்கி இருப்பதாக காவல் துறைக்கு ஒரு தகவல் வந்தது.
அதன்பேரில் உங்களைக் கைது செய்ய எங்கள் படை அரியலூர் விரைந்துள்ளது. உங்களைக் காணவில்லை என்று அவர்கள் திரும்பி வரச்சில நாட்கள் ஆகலாம். எனவே அதுவரை நீங்கள் விருது நகரில் இருக்கலாம். நாங்களும் கைது செய்ய மாட்டோம். எனவே இப்போது நான் உங்களைக் கைது செய்ய வரவில்லை'’ என்றார் எழுத்தச்சன்.
“வெளியே என் வேலைகள் முடிந்து விட்டன. இன்றே நான் உள்ளே (சிறைக்கு) வரத்தயார். தாமதிக்காமல் கைது செய்யுங்கள்'’ என்றார் காமராசர்.
அப்படியானால் சரி என்ற எஸ்.ஐ. காமராசரைக் கைது செய்து அழைத்துப் போனார். அப்போது ஜெயிலுக்கு போனவர் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் வெளியே வந்தார். வெள்ளை அரசாங்கம் போட்ட வழக்கில் நீதிமன்றம் காமராசருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது.(வெளியே வந்த பின்னரும் காமராசர் தனது ஜெயில் வாழ்க்கையைப்பற்றி மேடைகளில் பேசியதில்லை. பத்திரிகைகளில் எழுதியதில்லை. எழுத்தச்சன் பரிவுடன் நடந்து கொண்ட தால் அவரின் பெயரும் காமராசரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது)
ஒரு சமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் விருதுநகர் வழியாக சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு மூதாட்டி விருதுநகரில் ரோட்டின் ஓரமாக பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நேரு தன் அருகே இருந்த காமராஜரிடம் அங்கே ரோட்டின் ஓரமாக நிற்கும் பெண்ணை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உடனே காமராஜர் அது என் தாய் தான் என்று கூறினார்.
உடனே நேரு காரை நிறுத்தச் சொல்லி வண்டியை ரிவர்சில் எடுக்கச் சொன்னார். கார் அந்த மூதாட்டி அருகே வந்ததும் காரில் இருந்து இறங்கி காமராஜரின் தாயாரின் (சிவகாமி அம்மாள்) கையை பிடித்து அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா? என்று பாசத்துடன் கேட்டார்.
இதை அங்கு கூடி இருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
_ அன்றைய மத்திய கல்வி அமைச்சர் மாலி.
(தமிழ்நாடு அப்போது சென்னை மாகாணம்) என்று அழைக்கப்பட்டது)
தொகுப்பு: புலவர் மா.மார்க்ஸ் என்ற சக்திவேல்.
பட்டிவீரன்பட்டி
…..தென்மாநிலங்களை இணைத்து “தட்சிண பிரதேசம்” அமைக்க மத்திய அரசு முயற்சி
காமராஜர் எதிர்த்ததால் கைவிடப்பட்டது
மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டு வந்த நேரத்தில், மேற்கு வங்காள முதல்_அமைச்சராக இருந்த டாக்டர் பி.சி.ராய் ஒரு யோசனையை வெளியிட்டார்.
“மொழி அடிப்படையில் சிறிய மாநிலங்களை அமைப்பதற்கு பதிலாக, இந்தியா முழுவதையும் ஐந்து அல்லது ஆறு பெரிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இதனால், மாநில அரசுகள் பலம் உள்ளவையாக இருக்கும்” என்பதே அவருடைய யோசனை.
மேற்கு வங்காளத்தையும், பீகாரையும் ஒரே மாநிலமாக அமைக்கலாம் என்று அவர் கூறினார். இதற்கு, பீகார் முதல்_மந்திரியும் ஆதரவு தெரிவித்தார்.
தட்சிண பிரதேசம்
தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய “தட்சிண பிரதேசம்” அமைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
காங்கிரஸ் ஆதரவு
பெரிய மாநிலங்கள் அமைப்பது பற்றி, 1956_ம் ஆண்டில் அமிர்தசரஸ் நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆராயப்பட்டது. டாக்டர் பி.சி.ராய் வெளியிட்ட திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று அன்றைய மத்திய உள்துறை மந்திரி கோவிந்த வல்லப் பந்த் தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை வழிமொழிந்து சி.சுப்பிரமணியம் பேசினார். தீர்மானம் நிறைவேறியது.
பின்னர், கர்நாடக, கேரள முதல்_மந்திரிகளுடன் சி.சுப்பிரமணியம் இதுபற்றிப் பேச்சு நடத்தினார். “தட்சிணப் பிரதேசம் அமைக்கப்பட்டால் காமராஜர் முதல்_மந்திரியாக இருக்கவேண்டும்” என்று கூறி, அதற்கு அந்த இரு முதல்வர்களின் ஒப்புதலைப் பெற்றார்.
தி.மு.க. எதிர்ப்பு
“தட்சிண பிரதேசம் அமைக்கும் யோசனைக்கு தி.மு.கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
“நீங்கள் கேட்கும் திராவிட நாடுதானே தட்சிண பிரதேசம்! அப்படி இருக்க, ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று அமைச்சர் சி.சுப்பிரமணியம் கேட்டார்.
“நான் கேட்பது இட்லி. தட்சிணபிரதேசம் வெறும் மண் இட்லி” என்று அண்ணா பதிலளித்தார்.
பெரியார் தந்தி
“இந்தச் சமயத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரிடமிருந்து, காமராஜருக்கு ஒரு தந்தி வந்தது.
தட்சிணப் பிரதேசம் அமைக்கப்பட்டால், இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்கள் தலைமைக்கு ஆபத்து ஏற்படும். எனவே, தட்சிணப் பிரதேசம் அமைக்க சம்மதிக்காதீர்கள்” என்று அந்தத் தந்தியில் பெரியார் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, “தட்சிணப் பிரதேச யோசனையை நான் ஆதரிக்கவில்லை” என்று காமராஜர் அறிவித்தார்.
நேருவின் கருத்து
பெரிய மாநிலங்கள் அமைக்கும் திட்டத்தில், பிரதமர் நேரு ஆர்வம் காட்டவில்லை. “முதல்_மந்திரிகள் மீது எந்த முடிவையும் திணிக்க நான் விரும்பவில்லை. தட்சிணப் பிரதேசத்திட்டத்தை காமராஜர் ஏற்கவில்லை என்றால், அந்தத் திட்டத்தை கைவிட்டு விடுவதே சிறந்தது” என்று கூறிவிட்டார்.
அத்துடன் “தட்சிணப் பிரதேசம்” அமைக்கும் யோசனை கைவிடப்பட்டது.
பமஉநஈஅவ20நஉடபஉஙஆஉத2005123456789101112…………தொண்டராக இருந்து தலைவராக உயர்ந்தார், காமராஜர் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார்
சுதந்திரப் போராட்டக்காலத்தில் காங்கிரசின் முக்கியத் தலைவர்களாக திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜ×லு நாயுடு, எஸ்.சத் தியமூர்த்தி, ராஜாஜி ஆகியோர் விளங்கினார்கள்.
சிறுவயதிலேயே காந்தி மீது பற்றுக் கொண்டு காங்கிரசில் சேர்ந்த காமராஜர், தொண்டராக இருந்து ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்று, படிப்படியாக முன்னேறினார்.
தமிழக அரசியலிலும், பின்னர் அகில இந்திய அரசியலிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக புகழ் பெற்று விளங்கினார்.
பெற்றோர்
காமராஜர், 1903_ம் ஆண்டு ஜுலை 15_ந்தேதி விருதுநகரில் (அன்றைய பெயர் விருதுபட்டி) பிறந்தார். தந்தை பெயர் குமாரசாமி நாடார். தாயார் பெயர் சிவகாமி அம்மாள்.
காமராஜர் பிறந்து நான்கு ஆண்டுகளுக்குப்பின் பிறந்த அவருடைய ஒரே தங்கை நாகம்மாள்.
குமாரசாமி நாடார், தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். காமராஜருக்கு 6 வயதாகும்போது தந்தை திடீ ரென்று காலமானார். அதனால் காமராஜர் ஆறாம் வகுப்புடன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதாயிற்று.
வியாபாரம் பழகுவதற்காக தன் மாமாவின் ஜவுளிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
சின்ன வயதிலும், பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் காமராஜருக்கு இருந்தது. அப்போது முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. இந்தியாவில் மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாகிக் கொண்டிருந்தது. யுத்தச் செய்திகளையும், சுதந்திரப் போராட்டச் செய்திகளையும் காமராஜர் ஆர்வத்துடன் படித்தார்.
காமராஜருக்கு 15 வயதாகும் போது, “ஜாலியன் வாலாபாக் படுகொலை” நடந்தது. நூற் றுக்கணக்கான மக்களை ஜெனரல் டயர் சுட்டுக் கொன்ற செய்தியை அறிந்து காமராஜர் மனம் குமுறினார்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஆவேசம் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் எரிமலையாக வெடித்தது. அரசியல் அவரை ஈர்த்தது. காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினார்.
இதற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரையில் மகாத்மா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு காமராஜ ருக்குக் கிடைத்தது. காமராஜரின் தேசப்பற்றை நேரில் கண்ட காந்திஜி, காங்கிரசில் சேர்ந்து நாட்டுக்கு உழைக்குமாறு அவ ரிடம் கூறினார்.
அதன்படி காங்கிரஸ் கட்சி உறுப்பினராகச் சேர்ந்தார் காம ராஜர். காங்கிரசின் உண்மைத் தொண்டராக _ செயல் வீரராக மாறினார். ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று காங்கிர சுக்குப் பிரசாரம் செய்தார்.
இந்தச் சமயத்தில் காங்கிரஸ் தலைவரும், சிறந்த பேச்சாளருமான எஸ்.சத்தியமூர்த்தியுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவரைத் தன் அரசியல் குருவாக ஏற்றார்.
திருமண ஏற்பாடு
தன் ஒரே மகன், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது சிவகாமி அம்மாளுக்கு கவலை அளித்தது. திருமணம் செய்து வைத்தால் குடும்பப் பொறுப்பு ஏற்படும் என்று தாயாரும், தாய் மாமன் கருப்பையா நாடாரும் நினைத்தார்கள். பெண்ணும் பார்த்து, திருமணத்தேதியும் நிச்சயிக்கப்படும் அளவுக்கு ஏற்பாடுகள் நடந்தபோது, காமராஜருக்கு விஷயம் தெரிந்தது.
தாயாரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்த காமராஜருக்கு, இந்தத் திருமண ஏற்பாடு கடும் சினத்தை ஏற்படுத்தியது. “நாட்டுக்காக உழைப்பதே என் லட்சியம். கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினால், என்னை மறந்து விட வேண்டியதுதான்” என்று உறுதியாகவும், கண்டிப்பாகவும் கூறினார்.
அது முதல், கடைசி வரை திருமணப் பேச்சையே சிவகாமி அம்மாள் எடுக்கவில்லை.
9 ஆண்டு சிறைவாசம்
1930_ம் ஆண்டு உப்பு சத்தி யாக்கிரகப் போராட்டத்தில் காமராஜர் கலந்து கொண்டார்.
அதில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். காமராஜரின் முதல் சிறைவாசம் இது தான்.
அதன் பிறகு, காங்கிரஸ் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். மொத்தம் 9 ஆண்டு காலத்தைச் சிறையில் கழித்திருக்கிறார்.
ஆஅஇஓ
பமஉநஈஅவ20நஉடபஉஙஆஉத2005123456789101112…………தமிழ்நாடு காங்கிரசில் காமராஜர் யுகம் 16 ஆண்டுகள் தலைவர் பதவி வகித்து சாதனை
அந்தக்காலத்தில் தமிழ்நாடு காங்கிரசில் “ராஜாஜி கோஷ்டி” என்றும், “சத்தியமூர்த்தி கோஷ்டி” என்றும் இரண்டு கோஷ்டிகள் இருந்தன.
ராஜாஜிக்கு, மகாத்மா காந்தியிடமும், காங்கிரஸ் மேலிடத்தலைவர்களிடமும் செல்வாக்கு இருந்தது.
சத்தியமூர்த்தியின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த காமராஜர், அவருக்குச் சீடரானார். ராஜாஜிக்கும், சத்தியமூர்த்திக்கும் பல்வேறு சந்தர்ப் பங்களில் நடந்த மோதல்களின்போது, காமராஜர் தன் குருவுக்குத் துணையாக நின்றார்.
1936_ல் காரைக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது சத்தியமூர்த்தி தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். காமராஜர் செய லாளரானார்.
1936_ல் நேரு தமிழ்நாட்டில் சுற்றுப்பய ணம் செய்தபோது சத்தியமூர்த்தியும், காமராஜரும் உடன் சென்றனர்.
திராவக வீச்சு
1937_ல் சட்டசபை தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற்றார். காமராஜரை சாரட்டு வண்டி யில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, அக்கினித் திராவகம் நிரப்பப்பட்ட மின்சார பல்புகள் அவரை நோக்கி வீசப்பட்டன.
நல்ல வேளையாக அவை காமராஜர் மீது படாமல் குதிரைகளுக்கு முன்னால் விழுந்து உடைந்து சிதறின. இதனால் மிரண்டு ஓடிய குதிரைகளை, அருகில் இருந்தவர்கள் அடக்கினார்கள்.
1937_ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ராஜாஜி முதல்_மந்திரி யானார். “மந்திரிசபையில் நீர் இடம் பெறுவீர்” என்று சத்தியமூர்த்தியிடம் ராஜாஜி உறுதியளித்திருந்தார்.
ஆனால் சத்தியமூர்த்தி டெல்லி சென்றிருந்த போது, அவருக்கு பதிலாக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
தன் குரு ஏமாற்றப்பட்டதால், காமராஜர் மிகவும் மனம் வருந்தினார்.
காங்கிரஸ் தலைவர் பதவி
1939_ல் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்தியமூர்த்தியும் போட்டியிட்டனர். அதில் ஓமந்தூரார் வெற்றி பெற்றார். சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார்.
இந்தத் தோல்வியைத் துடைக்க, தன் சீடர் காமராஜரை காங்கிரஸ் தலைவர் ஆக்க சத்தியமூர்த்தி உறுதி எடுத்துக்கொண்டார்.
1940_ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் வந்தது. இந்த தேர்தலில், காமராஜரை நிறுத்தினார், சத்தியமூர்த்தி. கோவை சி.பி.சுப்பையாவை நிறுத்தினார், ராஜாஜி.
இருவருக்கும் கடும் போட்டி. முடிவில் காமராஜருக்கு 103 ஓட்டுகளும், சுப்பையாவுக்கு 100 ஓட்டுகளும் கிடைத்தன.
மூன்றே ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வென்ற போதிலும், அவர் பெற்ற வெற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரசில் “காமராஜர் சகாப்தம்” தொடங்க வழி வகுத்தது.
காமராஜருக்கு முன்னதாக ராஜாஜி, “இந்து” ஆசிரியர் கஸ்தூரிரங்க அய்யங்கார், எஸ்.சீனிவாச அய்யங்கார், சுப்பிரமணியசாஸ்திரி, ஈ.வெ.ரா.பெரியார், டாக்டர் பி.வரதராஜ×லு, சி.என்.முத்துரங்க முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலானோர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் ஒன்று அல்லது இரண்டு வருடத்துக்கு மேல் தலைவர் பதவியில் இருந்தது இல்லை.
ஆனால், 1940_ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்ற காமராஜர், தொடர்ந்து 16 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தார்.
தமிழ்நாட்டில் “காங்கிரஸ் என்றால் காமராஜர்” என்ற நிலை ஏற்பட்டது.
ஆஅஇஓ
பமஉநஈஅவ20நஉடபஉஙஆஉத2005123456789101112…………காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் நடந்த கல்விப்புரட்சி
காமராஜர் “கல்வி வள்ளல்” என்றும், “கல்விக்கண் திறந்த வர்” என்றும் புகழப்படுவதற்குக் காரணம், 1956_ம் ஆண்டு அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமாகும்.
1955_ம் ஆண்டு மார்ச் 27_ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், “சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு” நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்_அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடி வேலு அமர்ந்திருந்தார்.
தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று, சுந்தர வடிவேலுவிடம் காம ராஜர் விசாரித்தார்.
“தொடக்கப்பள்ளி களில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர் களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்” என்று சுந்தரவடிவேலு கூறினார்.
மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.
அவர் கூறியதாவது:_
“தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும்.
பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.
அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும்.
இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல.
தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்.”
இவ்வாறு காமராஜர் கூறினார்.
அமைச்சரவை ஆலோசனை
மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந் தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார்.
முடிவில் சத்துணவு திட் டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட் டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறிய தாவது:_
“அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்.
எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்.”
இவ்வாறு காம ராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆர வாரம் செய்தனர்.
15 லட்சம் பேர்
1956_ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது.
15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.
பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.
மதிய உணவு திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.
1954_ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962_ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது.
இதேபோல் 1954_ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964_ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது.
இலவச கல்வி
எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவச கல்வித் திட்டத்தை 1960_ல் காமராஜர் கொண்டு வந்தார்.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200_க்கு குறைவாக வரு மானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது.
1962_ம் ஆண்டில், “வரு மான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவச கல்வி” என்று காமராஜர் அறிவித்தார்.
1963_ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டது.
ஆஅஇஓ
பமஉநஈஅவ20நஉடபஉஙஆஉத2005123456789101112…………ராஜாஜி கொண்டு வந்த புதுக்கல்வி திட்டம் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த ராஜாஜியின் ஆட்சிக்கு, அவர் கொண்டு வந்த “புதுக்கல்வித் திட்டம்” பெரும் சோதனையாக அமைந்தது.
“மாணவ_மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்” என்பதே ராஜாஜியின் கல்வித்திட்டம்.
2 ஷிப்டுகளில் பள்ளிக்கூடம் நடத்தி, அதிகமானவர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார்.
“என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?” என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர்.
“அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்” என்று ராஜாஜி பதிலளித்தார்.
அவ்வளவுதான். ராஜாஜி கல்வித் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. “இந்த புதிய கல்வித் திட்டம், குலத்தொழிலை வளர்க்கத்தான் உதவும்; உழவன் மகன் உழவுத்தொழில் செய்யவேண்டும்; வண்டி இழுப்பவர் மகன் வண்டி இழுக்க வேண்டும்; சவரத் தொழிலாளியின் மகன் சவரம் செய்யவேண்டும்.
இது நல்ல கல்வித் திட்டம் அல்ல; குலக்கல்வித் திட்டம்” என்று எதிர்க்கட்சியினர் கண்டனக்குரல் எழுப்பினர்.
திராவிடர் கழகம், இந்தக் கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. “மூன்று மாத காலத்துக்குள் இந்த கல்வித்திட்டத்தை கைவிடவேண்டும். இல்லாவிட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம்” என்று பெரியார் எச்சரித்தார்.
மும்முனைப்போராட்டம்
தி.மு.கழக செயற்குழு, 1953 ஜுலை 13_ந்தேதி சென்னையில் கூடி “மும்முனைப் போராட்டம்” நடத்த முடிவு செய்தது.
போராட்டத் திட்டம் வருமாறு:_
1. முதல்_அமைச்சர் ராஜாஜி கொண்டு வந்துள்ள அரை நேரப்படிப்பு என்பது குலக்கல்வித் திட்டமாகும். அதை எதிர்த்து ஜுலை 14_ந்தேதி ராஜாஜி வீட்டு முன் ஈ.வெ.கி. சம்பத் மறியல் செய்யவேண்டும்.
2. திருச்சி அருகே உள்ள கல்லக்குடியில், டால்மியா என்ற வடநாட்டுக்காரர் சிமெண்ட் தொழிற்சாலை அமைத்த தால், அங்குள்ள ரெயில் நிலையத்துக்கு “டால்மியாபுரம்” என்று பெயர் வைத்துள்ளனர். அதை “கல்லக்குடி” என்று மாற்றவேண்டும். இதற்கான போராட்டத்தை ஜுலை 15_ந்தேதி மு.கருணாநிதி தலைமை தாங்கி நடத்த வேண்டும்.
3. தி.மு.க.வின் போராட்டங்களைப் பிரதமர் நேரு “நான்சென்ஸ்” என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜுலை 15_ல் ரெயில் நிறுத்தப் போராட்டம் நடத்த வேண்டும்.
இந்தப் போராட்டம் பற்றிய தீர்மானங்களைச் செயற்குழு நிறைவேற்றிக்கொண்டிருந்தபோதே அங்கு துணை போலீஸ் கமிஷனர் எப்.வி.அருள், ஒரு போலீஸ் படையுடன் வந்தார். அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், எஸ்.வி.நடராசன் ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
“நான்கு தம்பிமார்களுடன் நான் சிறை சென்றாலும், போராட்டத்தை நடத்த ஆயிரக்கணக்கான தம்பிமார்கள் இருக்கிறார்கள்” என்றார், அண்ணா.
ஜுலை 14_ந்தேதி, ராஜாஜி வீட்டு முன் மறியல் செய்ய இருந்த ஈ.வெ.கி.சம்பத் கைது செய்யப்பட்டு விட்டதால் அவருக்குப் பதிலாக சத்தியவாணிமுத்து மறியல் நடத்தச் சென்றார். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
ராஜாஜியின் மகள் காதல் திருமணம் காந்தியின் மகனை மணந்தார்
மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி. டெல்லியில் இருந்து வெளிவரும் “இந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிகையின் ஆசிரியர்.
இவருக்கும், ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
திருமணத்துக்கு காந்தியடிகள் உடனடியாக சம்மதிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. ஒரே ஒரு நிபந்தனை விதித்தார்.
“ஐந்து வருட காலம் நீங்கள் சந்திக்கக்கூடாது; கடிதமும் எழுதிக்கொள்ளக்கூடாது. அதன் பிறகும் நீங்கள் இதே உறுதி யுடன் காதலித்தால், உங்கள் திருமணத்தை நடத்தி வைக் கிறேன்” என்றார்.
அதன்படியே தேவதாசும், லட்சுமியும் ஐந்தாண்டுகள் காத்திருந்தனர். அதன் பின்னரே, 1933 ஜுன் 16_ந்தேதி புனா நகரில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
மணமக்களை வாழ்த்திய காந்திஜி, தாமே நூற்ற நூல் மாலை, ஒரு தேங்காய், பகவத் கீதை, பக்திப்பாடல் புத்தகங்கள் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.
மணமக்களுக்கு சிலர் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களையும், பட்டுப்புடவைகளையும் வழங்கியிருந்தனர். அவற்றைத் திருப்பித் தந்துவிடும்படி, மருமகளுக்குக் கட்டளையிட்டார், காந்தி.
ஆஅஇஓ
பமஉநஈஅவ20நஉடபஉஙஆஉத2005123456789101112…………காமராஜர் ஆட்சியின்போது பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைப்பு புதிய அணைகளும் கட்டப்பட்டன
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பெரிய தொழிற் சாலைகள் பெரும்பாலும் வடநாட்டில் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில், குறிப் பிடத்தக்க கனரகத் தொழிற் சாலைகள் அமைக்கப்படவில்லை.
இதனால், “வடக்கு வாழ் கிறது! தெற்கு தேய்கிறது” என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர். இது, மக்களின் மனதில் ஆழப் பதிந்தது. தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.
தி.மு.க. கூறுவதில் உண்மை இருப்பதை காம ராஜரும் உணர்ந்து கொண் டார். எனவே, தமிழ்நாட் டில் பெரிய தொழிற்சாலைகளை யும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ் நாட்டுக்கு கணிசமான தொகை ஒதுக்கும்படி செய்தார்.
சென்னை பெரம்பூரில், சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் ரெயில் பெட்டி தொழிற்சாலை ரூ.12 கோடி செலவில் தொடங்கப்பட் டது. இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.
நீலகிரியில் ரூ.11 கோடி மதிப்பில் பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கான தொழில் நுட்ப உதவியை பிரான்சு வழங்கியது.
சென்னை கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
நெய்வேலி நிலக்கரி
தென்ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று கண்டறியப்பட்டதும், 1956_ல் ரூ.160 கோடி மதிப்பீட்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்ப ரேஷன் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக அங்கு 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது.
சென்னை ஆவடியில் ராணுவ டாங்கி தொழிற் சாலை அமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டது.
திருச்சி பாய்லர் தொழிற்சாலை
திருச்சியை அடுத்த திருவெறும்பூரில், 1800 ஏக்கர் நிலத்தில் பாய்லர் தொழிற்சாலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டது.
துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையும் திருச்சியில் அமைக்கப்பட்டது.
சென்னை கிண்டி, மதுரை, விருதுநகர், திருச்சி உள்பட 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மூன்றாவது ஐந் தாண்டு திட்டத்தில் மேலும் 13 தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு முடிவு செய்தது.
அப்போது அம்பத்தூரில் 1,200 ஏக்கர் நிலத்தில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன.
இதேபோன்ற தொழிற் பேட்டை, ராணிப்பேட்டையிலும் அமைக்கப்பட்டது.
அணைகள்
கி.பி. 2_ம் நூற்றாண்டில் காவிரி ஆறு குறுக்கே சோழ மன்னன் கட்டிய கல்லணை தான் உலகின் முதல் அணை. வெள்ளையர் ஆட்சியில், 1934_ம் ஆண்டில் மேட்டூரில் கட்டப்பட்ட அணைதான், இந்தியாவில் சிமெண்ட்டை பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் அணையாகும்.
காமராஜர் ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் பல அணைகள் கட்டப்பட்டன. அவற்றில் சிறந்தது, பரம்பிக் குளம் _ ஆளியாறு அணைக் கட்டு ஆகும். தமிழ்நாட்டில் ஆனைமலையில் உற்பத்தியாகும் நதிகளின் நீர், கேரளத்தின் வழியாக ஓடி வீணாக அரபிக் கடலில் கலந்தது.
அதைத் தடுத்து, அந்த நீரை நீர்ப்பாசனத்திற்கும், மின்சார உற்பத்திக்கும் பயன்படும் விதத்தில் சென்னை மாநில அரசும், கேரள அரசும் பேச்சு நடத்தி, இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
கீழ்பவானி நீர்த்தேக்க திட்டம், சாத்தனூர் நீர்த்தேக்க திட்டம், வைகை அணைக்கட்டுத் திட்டம், மணிமுத் தாறு திட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டம், புள்ளம் பாடி கால்வாய் திட்டம் ஆகியவையும் காமராஜர் ஆட்சியின் போது நிறை வேற்றப்பட்டவைதான்.
திருச்சிக்கு பாய்லர் தொழிற்சாலை வந்தது எப்படி?
1962_ம் ஆண்டில், தென்னாட்டில் பெரிய தொழிற்சாலை ஒன்றை, செக்க_சுலோ_வக்கியா நாட்டு உதவியுடன் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இடத்தை தேர்வு செய்ய “செக்” நாட்டு நிபுணர் குழுவினர் இந்தியா வந்தனர். முதலில் ஆந்திரா சென்று சில இடங்களைப் பார்வையிட்டனர். சில இடங்கள் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். பிறகு சென்னை வந்தனர்.
சென்னையில் சில இடங்களை நிபுணர்கள் பார்வையிட்டனர். “இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. பெரிய இயந்திரங்களைத் தாங்கக்கூடிய வகையில், தரையும் கடினமாக இல்லை. எனவே, இங்கு இந்த தொழிற்சாலையை அமைக்க இயலாது” என்று கூறினர்.
அப்போது முதல்_அமைச்சராக காமராஜர் இருந்தார். அவர் அமைச்சர் ராமையாவை அழைத்து, “திருச்சிக்குப் பக்கத்தில், கடினமான தரையுள்ள நிலம் நிறைய இருக்கிறது. தண்ணீரும் தாராளமாக கிடைக்கும். நீங்கள் உடனே நிபுணர் குழுவை திருச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.
உடனே அமைச்சர் ராமையா, நிபுணர் குழுவினரை திருச்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் ஏராளமான நிலம் காடு போல் கிடந்தது. அந்த இடத்தின் மண் வளத்தையும், தண்ணீர் வசதியையும் பரிசோதித்த நிபுணர்கள், “தொழிற்சாலை அமைக்க இந்த இடம் பிரமாதமாக இருக்கிறது” என்று அறிவித்தனர்.
இந்தச் செய்தி வெளியானதும், ஆந்திராவில் பயங்கர கலவரம் மூண்டது. “தொழிற்சாலையை ஆந்திராவில்தான் அமைக்க வேண்டும். திருச்சியில் அமைக்கக் கூடாது” என்று ஆந்திரர்கள் கிளர்ச்சி செய்தனர்.
இதனால் மத்திய அரசு, அமைய இருக்கும் தொழிற்சாலையை இரண்டாகப் பிரிக்கத் தீர்மானித்தது. “டிரான்ஸ்பார்மர்” தொழிற்சாலையை ஆந்திராவிலும், பாய்லர் தொழிற்சாலையை திருச்சியிலும் அமைக்க முடிவு செய்தது.
பாய்லர் தொழிற்சாலைக்கும், அதன் விரிவாக்கத்துக்கும், குடியிருப்புகள் அமைக்கவும், மற்ற வசதிகள் செய்யவும் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது.
1965_ம் ஆண்டில், பாய்லர் தொழிற்சாலையை அன்றைய ஜனாதிபதி ஜாகிர் உசேன் தொடங்கி வைத்தார். இன்று, பாய்லர் தொழிற்சாலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பதுடன், அந்தப்பகுதியே நவீன நகரமாக காட்சி அளிக்கிறது.
ஆஅஇஓ
பமஉநஈஅவ20நஉடபஉஙஆஉத2005123456789101112…………முதுகுளத்தூர் கலவரம் இம்மானுவேல் கொலை
1957 பொதுத் தேர்தலுக்குப்பின், காமராஜர் ஆட்சிக்கு சில சோதனைகள் ஏற்பட்டன. அதில் முக்கியமானது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த வகுப்பு கலவரமாகும்.
1957 ஜுலை முதல் செப்டம்பர் வரை இரு சமூகத்தி னர் இடையே நடந்த இந்த கலவரத்தில், ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர்.
சமாதான கூட்டம்
முதுகுளத்தூரில் அமைதியை நிலை நாட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் செப்டம்பர் 10_ந்தேதி சமாதானக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில் சர்வ கட்சிப் பிரமுகர்கள், வட்டாரத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேவர்கள் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரும், ஆதிதிராவிடர்கள் சார்பில் இம்மானுவேலும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதங்கள் நடந்தன. சமாதானம் ஏற்படவில்லை.
இம்மானுவேல் கொலை
இந்த கூட்டத்துக்கு மறுநாள் (11_ந்தேதி) காலை இம்மானுவேல் பஸ் மூலம் பரமக்குடிக்கு சென்றார். அங்கே நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அன்று இரவு 8.30 மணிக்கு இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டார். பஸ் நிலையத்தில் ஒரு கூட்டம் அவரை சுற்றி வளைத்து வெட்டி கொன்றது.
இதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடித்தது.
இம்மானுவேலை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய, கீழ்த்தூவல் கிராமத்துக்கு போலீசார் சென்றனர்.
அப்போது, அரிவாள், கம்பு, கத்தி முதலிய ஆயுதங் களுடன் பலர் கூட்டமாக வந்து போலீசாரைத் தாக்கினர். இதைத்தொடர்ந்து, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில், 5 பேர் இறந்ததாக போலீஸ் அறிவித்தது.
“இல்லை. அப்பாவி மக்கள் ஐந்து பேரைப் பிடித்து அடித்து, கைகளையும், கண்களையும் கட்டி, குளக்கரையில் நிற்க வைத்து சுட்டுக்கொன்றனர்” என்று கீழ்த்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர்.
விசாரணை
இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு, வருவாய்த்துறை வாரியத்தின் உறுப்பினர் எஸ்.வெங்க டேசுவரனுக்கு அரசாங்கம் உத்தரவிட்டது. அவர் பரமக்குடிக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசா ரணை நடத்தினார்.
பின்னர் அரசாங்கத்திடம் அவர் அறிக்கை கொடுத் தார். “பயங்கர ஆயுதங்களால் தாக்க வந்தவர்களை அடக்க போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் 5 பேர் மாண்டனர். எவரையும் கட்டி வைத்து சுட்டுக்கொல்லவில்லை” என்று அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
இந்த அறிக்கையை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை.
இது தொடர்பாக, சட்டசபையில் காமராஜர் தலைமையிலான மந்திரிசபை மீது 28_10_1957_ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கம்ïனிஸ்டு தலைவர் எல்.கல்யாணசுந்தரம் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அவர் பேசுகையில், “ஆயிரம் பேர் கொண்ட கூட்டத் தின் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினால், வெறும் ஐந்து பேர் மட்டும்தான் சாவார்களா?” என்று கேட்டார்.
தி.மு.க. தலைவர் அண்ணா பேசும்போது, “முதுகுளத் தூர் கலவரத்தில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என் பதை கண்டு கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் பற்றி நீதி விசா ரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தெரியும்” என்று வலி யுறுத்தினார்.
விவாதத் துக்கு நிதி அமைச்சர் சி.சுப்பிரமணி யம் பதில் அளிக்கை யில், ஐந்து மறவர்களின் கைகளை கட்டி போலீசார் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்ட புகாரை மறுத்தார். “தமிழ்ப்பண்பு படைத்த நமது போலீஸ் அதிகாரிகள், ஒருபோதும் நிரபராதிகளை சுடமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.
தீர்மானம் தோல்வி
முடிவில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக
28 பேர்களும், எதிராக 146 பேர்களும் வாக்களித்தனர்.
தீர்மானம் தோற்றது.
தி.மு.கழகம் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை. “நீதி விசாரணை நடத்த அரசாங்கம் மறுப்ப தால், வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறிவிட்டு, வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே சபையில் இருந்து அண்ணாவும், மற்ற தி.மு.க. உறுப்பினர்களும் வெளியேறினர்.

1 comment:

  1. ரொம்ப அழகா இருந்துச்சு உங்க கருத்துக்கள். நான் உங்க கருத்துக்கள பேஸ்புக்கில் உபயோகபடுத்தாலமா?
    தலைவர் பிறந்த நாள் முதல்.

    ReplyDelete